கடன் செய்ய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்துக்கூறல் 2231. | என்னும் வேலையில் எழுந்த வீரனை, ‘அன்னை தீமையால் அரசன் நின்னையும், துன்னு துன்பத்தால், துறந்து போயினான், முன்னரே’ என முனிவன் கூறினான். |
என்னும் வேலையில்- என்று (அவர்கள்) கேட்டுக்கொண்ட சமயத்தில்; எழுந்த வீரனை - கடன் செய்ய எழுந்தபரதனை; முனிவன் - வசிட்ட முனிவன்; (தடுத்து) ‘அரசன் - தயரதன்’ அன்னைதீமையால் - நின் அன்னை செய்த தீமையால்; துன்னு துன்பத்தால்- நெருங்கியதுன்பத்தால்; நின்னையும் - (மகனாகிய) நின்னையும்; முன்னரே - உயிரோடிருந்த அப்போதே; துறந்து - மகன் அல்லன் எனக் கைவிட்டு; போயினான் - இறந்தான்;’ என - என்று (அதனால் நீ உரிமைக்கு ஆகாய் என்று); கூறினான் -. “மன்னே ஆவான் வரும் அப்பரதன் தனையும் மகன் என்று உன்னேன்; முனிவா அவனும் ஆகான்உரிமைக்கு” (1654) எனத் தயரதன் கூறலின் வசிட்டன் இங்குத் தடுத்தான் என்க; அது அவன்மட்டுமேஅறிந்த செய்தி. 130 பரதனின் துயர் மிகுதி 2232. | ‘துறந்து போயினான் நந்தை; தோன்றல்! நீ பிறந்து, பேர் அறம் பிழைத்தது’ என்றபோது, இறந்து போயினான்; இருந்தது, ஆண்டு, அது மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம். |
(வசிட்டன்) ‘தோன்றல்! - பரதனே!; நீ பிறந்து பேர் அறம் பிழைத்தது- நீ பிறந்ததனால் பெரிதாகிய (அரசகுலத்து) அறம் தவறிவிட்டது (மூத்தவன் இருக்க இளையவனாகியநீ வரத்தால் அரசு பெற்றமையால்); நுந்தை துறந்து போயினான் - (அதனால்)உன்தந்தையாகிய தயரதன் உன்னை (மகனல்லன் என்று) துறந்து இறந்தான்; என்ற போது - என்று சொல்லிய போது; இறந்து போயினான் - (பரதன்) இறந்து போனான்; ஆண்டு இருந்ததுஅது - அவ்விடத்தில் (பரதன்) இருப்பதாகிய அத்தோற்றம் காண்பது; மறந்து - தன்தன்மை கெட்டு; வேறொரு மைந்தன் ஆம் கொலாம் - வேறு ஒரு மகனாக இருக்கும் போலும். வசிட்டன் சொற்கேட்ட அளவில் பரதன் இறந்து போனான்; இருக்கின்றவன் பரதன் அன்றோஎனின்? அன்று; இவன் வேறு ஒரு மகன்; அவனும் தன் தன்மை திரிந்து பரதனைப்போல உருவம்கொண்டுள்ளான் போலும் என்றவாறாயிற்று. பரதனது துயர் மிகுதி பற்றி இங்ஙனம் கூறினார். ‘கொல்’ ஐயப்பொருளில் வந்தது. 131 |