வசிட்டன் சத்துருக்கனனைக் கொண்டு இறுதிக்கடன் செய்வித்தல். 2237. | என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத் துன்று தாரவற்கு இளைய தோன்றலால், அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் - நின்று நான்மறை நெறி செய் நீர்மையான். |
நான்மறை நெறி நின்று- நால் வேத வழியில் தான் நிலை பெற்று நின்று; செய் நீர்மையான் - (அவ்வேதவழியிலே) எல்லாவற்றையும் (குறையறச்) செய்கின்ற தன்மை உடையவனாகிய வசிட்டன்; என்றுகூறி -; நொந்து இடரின் மூழ்குறும் - மனம் வருந்தித் துயரில் மூழ்கியுள்ள; அத்துன்றுதாரவற்கு - அந்த நெருங்கிய மாலை அணிந்துள்ள பரதனுக்கு; இளைய தோன்றலால் -பின்பிறத்த தம்பியாகிய சத்துக்கனனால்; அன்று - அப்பொழுது; நேர் -தயரதனுக்குச் செய்ய வேண்டிய; கடன் - இறுதிச் சடங்குகளை; அமைவது ஆக்கினான்- பொருந்துவதாகச் செய்து முடித்தான். ‘தாரவன்’ - என்பது அரசகுலத்தான் என்பதால் சொல்லப்பெற்றது. இங்குத் தார்அணிந்திருந்தான் எனல் வேண்டுவதின்று; துக்கச் செயல்கள் நிகழ்கிறதாகலின்; அணிந்திருந்ததாரைக் கழற்றி எறிவதும், எறியாமையும் ஆகிய எவற்றையும் சிந்திக்காத மனநிலை பரதனதுஅப்போதயை நிலை. 136 தயரதன் தேவிமார் தீக்குளித்து நற்கதி பெறுதல் 2238. | இழையும் ஆரமும் இடையும் மின்னிட, குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள்தாம் தழை இல் முண்டகம் தழுவு கானிடை முழையில் மஞ்ஞைபோல், எரியில் மூழ்கினார். |
குழையும் - ஒல்கித் தளரும்; மா மலர்க் கொம்பு அனார்கள்தாம்- சிறந்த மலர் பூத்த கொம்பினை ஒத்தவர்களாகிய தேவியர்கள்; இழையும் ஆரமும் இடையும்மின்னிட - பொன் வடமும், முத்துவடமும், இடுப்பும் மாறிமாறி மின்னொளி செய்ய; தழைஇல் முண்டகம் தழுவு காளிடை - தழையற்ற (செந்)தாமரை மலர்களே நிரம்பியுள்ளகாட்டினிடத்து; முழையில் மஞ்ஞை போல் - மலையிடத்து வாழும் மயில் கூட்டம்மூழ்குவதுபோல; எரியில் மூழ்கினார் - நெருப்பில் மூழ்கி விண்ணுலகு சென்றனர். செந்தாரைக் காட்டினுள் மயில்கல் புகுவதுபோல் நெருப்பிடையே தேவி மார்மூழ்கினர்என்பதாம் |