செல்வம்- ‘வினை’ என்பது நன்மை தீமை இரண்டையும் குறிக்கும். ஆயினும், தீமையையேபெரும்பாலும் குறித்துநிற்றல் வழக்கு நோக்கி உணர்க. ‘ஈன்ற தாய்வினை செய்ய அன்றோகொன்றனன் தவத்தின் மிக்கான்’ என்று (7415) பின்னும் இப்பொருளில் பயின்றுள்ளது காண்க. 139 பத்து நாள்கள் சடங்குகள் நடைபெறல் 2241. | ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என, மைந்தன், வெந் துயர்க் கடலின் வைகினான்; தந்தை தன்வயின் தருமம் யாவையும், முந்தை நூலுளோர் முறையின் முற்றினான். |
மைந்தன் - பரதன்; ஐந்தும் ஐந்தும் நாள்- பத்து நாள்களும்; ஊழி ஆம் என - ஒரு யுகக்காலம் போலத் தோன்ற; வெம் துயர்க் கடலின் வைகினான் - கொடியதுன்பக் கடலில் கிடந்து; தந்தை தன்வயின் - தந்தையிடத்து; தருமம் யாவையும் -செய்யக் வேண்டிய இயல்புகள் (சடங்குகள்) எல்லாவற்றையும்; முந்தை நூலுளோர் முறையின் - முன்னோர் கூறிய ஒழுக்க நூல்களிற் கண்டுள்ள முறைப்படியே; முற்றினான் - செய்து முடித்தான். சத்துருக்கனனைக் கொண்டு செய்து முடித்தான் என்பது கருத்து. தலைமை பரதன் மேற்றாதலின்மைந்தன் என்றது பரதனையே குறிக்கும்; தந்தைக்குரிய கடன்களைச் சத்துருக்கனன் செய்தான்ஆயினும், பரதன் தானே தன்பொருட்டு ஆற்றவேண்டிய நீர்க்கடன் முதலியவற்றை ஆற்றினான்என்றலும் ஒன்று. 140 வசிட்டனும் மந்திரக்கிழவரும் பரதனை வந்து அடைதல் 2242. | முற்றும் முற்றுவித்து உதவி, மும்மை நூல் சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான், வெற்றி மா தவன் - வினை முடித்த அக் கொற்ற வேல் நெடுங் குமரற் கூறுவான்; |
வெற்றி மா தவன்- எய்தன எய்தற்பாலதாய சிறந்த பெருந்தவத்தைச் செய்து முடித்த வசிட்டன்; முற்றும் - தயரதனுக்குரிய சடங்குகள் முழுதும்; முற்றுவித்து உதவி - நிரம்புமாறு செய்துதவி; (பிறகு) மும்மை நூல் சுற்றம் யாவையும் தொடர - முப்புரிநூல் அணிந்த வேதியர் அனைவரும் தன்னைத் தொடர்ந்து வர; தோன்றினான் - பரதன் அரண்மனையில் தோன்றினான்; வினை முடித்த - தயரதனுக்குச் செய்யவேண்டிய இறுதிச் செயல்களைச் செய்து நிறைவேற்றிய; அக் கொற்ற வேல் நெடுங் குமரன்- அந்த வெற்றி பொருந்திய வேலை ஏந்திய உயர்ந்தகுமரனாகிய பரதனுக்கு; கூறுவான் - எடுத்துச் சொல்லலானான். |