பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 55

 நின் நெடும் புதல்வன்தனை, நேமியான்,
தொல் நெடும் முடி சூட்டுகின்றான்’ என்றார்.

     நேமியான் - சக்கரவர்தியாகிய தயரதன்;  நின் நெடும் புதல்
வன்தனை -
உன் பெருமைக்குரிய மகனாகிய இராமனை;  மன் நெடுங்
கழல் வந்து  வணங்கிட -
எல்லாஅரசர்களும்  உன் பெரிய வீரக்கழல்
அணிந்த அடிகளில் வீழ்ந்து வணங்க;  பல் நெடும் பகல்- பல நீண்ட
நாள்கள்;  பார் அளிப்பாய் - இந்நிலவுலகத்தைக் காப்பாயாக; என-
என்று கூறி; தொல் நெடும்முடி - பழமையான நீண்ட திருமுடியை; 
சூட்டுகின்றான்- அணிவிக்கின்றான்;  என்றார் - என்று சொன்னார்.

     நின் நெடும் புதல்வன் நின் மூத்த புதல்வன் என்றும் ஆம்.
நால்வரையும் தன் மக்களாகக்கருதி அன்பு செய்பவள் கோசலை ஆதலின்,
இராமனைக் குறிக்க ‘மூத்தபுதல்வன்’ என்னும்பொருளில், ‘நெடும்புதல்வன்’
என்றாராம். தொல்முடி - பாரம்பரியமாக வந்து கொண்டிருக்கின்றமுடி. ‘மன்
நெடுங்கழல் வந்து வணங்கிட’ தயரதன் பொருந்திய தனது நெடிய வீரக்கழல்
அணிந்த அடியில்இராமன் வந்து வணங்கிட, அவனுக்கு முடிசூட்டுகின்றான்
எனக் கூட்டிப் பொருள் உரைத்தலும் ஒன்று.                        4

கோசலையின் மன நிலை  

1403.‘சிறக்கும், செல்வம் மகற்கு’ என, சிந்தையில்
பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,
வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால் -
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

     (அது கேட்ட கோசலைக்கு) ‘மகற்குச் செல்வம் சிறக்கும்’ என -
தன் மகனாகிய இராமனுக்குஅரசச் செல்வம் சிறக்க இருக்கிறது என்று;
சிந்தையில் - மனத்தில்;  பிறக்கும்பேர் உவகைக் கடல் - தோன்றிய
பெரிய மகிழ்ச்சிக் கடல்; பெட்பு அற-பெருமையற்றுப் போக; மன்னவன் -
தன் நாயகனாகிய தயரதன்;  துறக்கும் - துறந்து செல்வான்; என்னும்
துணுக்கம் -
என்கின்ற அச்சமானது;  வறக்கும் - வறண்டுபோகச்செய்யும்;
மா - பெரிய; வடவைக்கனல் - வடவைத் தீயை; ஆனது - ஒத்திருக்கிறது.

     மகன் முடிசூடுவான் என்ற மகிழ்ச்சியை,  மன்னன் துறப்பான் என்ற
அச்சம் அடக்கிவிட்டது என்பதை இவ்வாறு கூறினார். வடவைத்தீ -
வடவை முகத்தோடு கூடிய நெருப்பு; வடவை - பெண் குதிரை. இந்நெருப்பு
கடலின் இடையே உள்ளது  எனவும்,  கடல் நீரை ஓரளவுக்கு மிகாது சுவறச்
செய்யும் ஆற்றல்உடையது எனவும், ஊழிக்காலத்தில் மேல எழும்பி கடல்
நீர் அனைத்தையும் வற்றச் செய்துவிடும்எனவும் புராணிகர் கூறுவர்.
உவகைக் கடல்,  வடவைக் கனல் என்பன உருவகம். “உறத்தகும் அரசு
இராமற்கென்றுஉவக்கின்ற