‘மகனே! உனை, மாநிலம் தஞ்சமாக நீ தாங்கு’ என்ற வாசகம் (1614.) என்ற கோசலை கூற்றுஇங்கு முதலடியோடு ஒப்பு நோக்கத்தக்கது. அயோத்திக்கு வந்தது முதல் அமுத வண்ணமாக இருக்கின்றபரதனுக்கு ‘அருவிக் கண்ணினான்’ என்பது ஒரு பெயராகக் கொள்க. 12 2256. | நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும் இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்; ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர, தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்; |
(பரதன்), நடுங்கினன் - (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்கி; நாத்தடுமாறி - (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் - கண்கள்(குழிவிழுந்து ) உள்செல்லப் பெற்று; மகளிரின் - பெண்களைப் போல; இரங்கும் நெஞ்சினன்- நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய உயிரினன்- மூச்சு ஓடுங்கப்பெற்று(மூர்ச்சித்து); உணர்வு கைதர - (பின்னர்) மூச்சு எழும்பி உணர்வு வரப்பெற; அரசவைக்கு- அரசவையில் உள்ளவர்க்கு; உள்ளம் - தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் - சொல்லத் தொடங்கினான். துக்கம் வந்தவுடன் அறிவழிந்து புலம்பல் மகளிர் இயல்பு - “பெட்டைப் புலம்பல்பிறர்க்குத் துணையாமோ’ (பாஞ்சாலி சபதம் 62. 22.) என்ற பாரதி பாடல் காண்க. 13 பரதன் தன் மனக் கருத்தை அரசவைக்கு எடுத்துச் சொல்லுதல் 2257. | ‘மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல் தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல், சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால், ஈன்றவன் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ? |
‘மூன்று உலகினுக்கும்- மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில் உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன்ஆய் - ஒப்பற்ற முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க - (எனக்கு) முன்னே பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே; யான் மகுடம் சூடுதல் - யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்; சான்றவர் உரைசெய - பெரியோர்கள்தக்கதே என்ற தம் வாயால் எடுத்துரைக்க; தருமம் ஆதலால் - அறம் என்று கருதப்படுகின்றது ஆதலாம்; ஈன்றவள் செய்கையில் - (இதே செயலைச் செய்த) என்னைப் பெற்றதாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்; இழுக்கு உண்டாகுமோ - தவறு உளதாகுமா?’ ‘மூத்தவன் இருக்க இளையவனாகிய நான் அரசு புரிவது தருமம் என்று வசிட்டரே கூறினால்கூறினால் என்தாய் கூறியதில் என்ன தவறு? என்கிறான் பரதன். |