பக்கம் எண் :

ஆறு செல் படலம் 573

2284.மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!
புல்கிய மணிவடம் பூண்கிலாமையால்,
ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே.

     ஒல்கிய - (மகளிரது ) வளையும் தன்மை உள்ளனவாகிய இடைகள்;
புல்கிய -(எப்பொழுதும் தம்மைத்) தழுவிக் கிடக்கும்;  மணிவடம் -
மணிகள் பதிக்கப்பெற்றவடங்களை; பூண்கிலாமையால் -  (இப்பொழுது)
அணியாமையால்;  ஒருவகைப் பொறைஉயிர்த்த - ஒருபடியாகப் பாரம்
நீங்கி இளைப்பாறின;  (எனவே) கேகயன் மடந்தைமல்கிய வாசகம் -
கைகேயியின் வளமான வரம்;  நல்கியது - அருள் செய்தது;  அரிவையர்
நடுவிற்கே கொல் -
மகளிரது  இடைக்கு மட்டும் போலும்.

     கைகேயி கேட்ட வரத்தால் நலம் பெற்றது பெண்கள் இடை
ஒன்றுதான்; இத்துணைக் காலம் பல மணிவடச் சுமைகளைத் தாங்கியிருந்த
இடை  இப்போது  சுமைநீங்கி ஆறுதல் பெற்றன என்றார்.

     இடையில் அணியும் மணிவடங்கள். விரிசிகை, கலாபம், பருமம்,
மேகலை, காஞ்சி எனஐந்து வகையாகி 32, 21, 14, 8, 2 காசுகள்
கோக்கப்பெற்று  இருக்கும் என்ற செய்திகளை

“எண்ணிரண்டு இரட்டி கோத்த விரிசிகை இருபத் தொன்றில்
பண்ணிய கலாபம் ஈரேழ் பருமநா லிரண்டிற் செய்த
வண்ணமே கலை யிரண்டிற் காஞ்சி இவ் வகை ஓர் ஐந்தும்
புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்பப் பூத்த போற்
                                   புலம்பப் பூட்டி”

என்னும் திருவிளையாடற் புராணச் செய்யுளால் (திருவிளை. மதுரைக்
திருமணப். 158)அறியலாம். ‘ஏ’ காரம் ஈற்றசை.                      41

2285.‘கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்’
காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம்’ என, நிகழ்ந்தது - அவ் அளவு இல் சேனையே.

     அவ் அளவு இல் சேனை - அந்த அளவற்ற சேனையானது;
கோமகன் பிரிதலின் -அரச குமாரனாகிய இராமன் நாடு விட்டுக் காடு
சென்றபடியால்;  கோலம் நீத்துள - தன்அலங்காரத்தைத் துறந்துள்ள;
தாமரைச் செல்வியும் - இலக்குமியும்;  தவத்தைமேவினாள் - (தானும்)
தவம் செய்ய விரும்பிச் சென்று விட்டாள்;  காமனும் -மன்மதனும்;
அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம் - (இன்பம் நுகர்வார் எவரும்
இன்மையின் தன்தொழில் இறந்தது  என்று) அரிய துன்பக் கடலில்
மூழ்கிவிட்டானாகும்;  எனநிகழ்ந்தது - என்று சொல்லுமாறு பொலிவும்
மகிழ்ச்சியும் இன்றிச் சென்றது.