தலைவன் என்பது தொல்லோர் வழக்கு நோக்கி உணர்க. இந்திரன் பகைவனாகிய விருத்திராசுரன் கடலிற் புக்கு ஒளி்ந்துகொள்ள இந்திரன் முதலிய தேவர்கள் வேண்ட அகத்தியர் அக்கடல் நீரை உழுந்தளவாக்கி அகங்கையில் இட்டுக் குடித்துக் கடலை வற்றச் செய்தனர் என்னும் வரலாற்றைத் திருவிளையாடற் புராணம் இந்திரன் பழிதீர்த்த படலத்துட் கண்டுணர்க(திருவிளை. மதுரைக். இந்திரன்பழி. 49 - 53) மேரு மலையில் பார்வதி தேவியார் திருமணத்தின்போது தேவரெல்லாரும் கூடிச் சேர இருத்தலின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்துவிடச் சிவபெருமான் இதைச் சமப்படுத்தத் தக்கவர் அகத்தியரே என்பது கருதி. அவரைத் தெற்கே அனுப்ப, அவர் வந்து பொதியமலைக்கண் இருத்தலின் பூமி நேராயிற்று என்னும் வரலாற்றையும், அவ்வாறு வருங்கால் இடையில் விந்தியமலை செருக்கடைந்து பிற மலைகளிலும் மேல் உயர்ந்துவிட, தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, தென்திசைவரும் அகத்தியர் விந்தி மலையின் உச்சியில் தம் கையை வைத்து அழுத்த அம்மலை பாதலத் தழுந்தியது என்னும் வரலாற்றையும் கந்த புராணத்தால் அறியலாம். அகம் - பூமி “மனமும் உள்ளும் மனையும் பாவமும், புவியும் மரப்பொதுப் பெயரும் அகமே” என்பது (பிங்கலந்தை.) காண்க. ‘ஏ’ ஈற்றசை. 44 | 2288. | அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால் குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள் மறிகடல் ஒத்தது - அவ் அயோத்தி மாநகர். |
அவ் அயோத்தி மாநகர் - அந்த அயோத்தி மா நகரமானது; அறிஞரும்,சிறியரும் ஆதி அந்தமா - அறிவானமைந்த பெரியோர் முதல் சிறியவர் வரை (அனைவரும்); செறி பெருந் தானையும் - நெருங்கியுள்ள பெரிய சேனையும்; திருவும் -செல்வமகளும்; நீங்கலால் - நீங்கிக் காடு நோக்கிச் சென்றுவிட்டபடியால்; குறியவன் - அகத்திய முனிவன்; புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் - (தன்)நீரை யெல்லாம் வயிற்றில் அடக்கிய அந்நாளில்; மறிகடல் ஒத்தது- அலைவீசும் கடல்வறிதானாற் போன்றது. வெறுமை அடைந்த அயோத்திக்கு அகத்தியர் உண்ட கடல் உவமையாயிற்று. ”அறந்துறந்து ஈட்டுவார்தம் அருள்பெற்ற செல்வம் போல, வறந்தன படுநீர்ப் பௌவம்” என்பதனால் (திருவிளை. மதுரைக். இந்திரன்பழி. 54) அகத்தியர் உண்ட கடலின் இயல்பினை அறிக. இறுகாறும் சேனைஎன்று கூறினாரேனும், அயோத்தி நகர ஆடவர் மகளிர் அனைவரையும் உள்ளடக்கியே அவ்வாறு கூறிச் செல்கின்றார் என்பதைக் கவிப் போக்கால் காணலாம். 45 | 2289. | பெருந் திரை நதிகளம், வயலும், பெட்புறு மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத் திருந்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் அருந்தெரு ஒத்தது - அப் படை செல் ஆறு அரோ. |
|