உயிர் உணா வகை- மார்பினை ஊடுருவிச் சென்று அவர்கள் உயிரைப் போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது- அரிய பெரிய கவசம் அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது. இராமன் வனம் போய துயரால், பெண்டிரும் காதற் பார்வை இழந்தனர், ஆடவரும்அப்பார்வையால் துன்புறுதல் இலர் என்று இருவர்க்குமே இதனைக் கொள்க. ‘ஏ’ காரம்ஈற்றசை. 50 | 2294. | கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம் - அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர் மனம் கிடந்து உண்கில, மகளில் கொங்கையே? |
அனங்கன் ஐங்கொடுங்கணை அடரும் ஆடவர் மனம் - மன் மதனது (பிறரை வருத்தும்)ஐந்து கொடிய கணையால் நெருக்கப்படும் ஆண்களது மணம்; மகளிர் கொங்கை - பெண்களது முலைகளில்; கிடந்து உண்கில - இருந்து தங்கி அநுபவியாமல் போயின; கனம் குழை கேகய மகளின் கண்ணிய சினம் - கனமான காதணி அணிந்த கைகேயியின்மேல் (மகளிர்) கருதியசினம்; கிடந்து - பெண்கள் இடத்தே தங்கி; எரிதலின் - எரிகின்றகாரணத்தால்; தீர்ந்தவே கொல் - (கொங்கைகள் கடும் என்று கருதித்)தவிர்ந்தனவோ? கைகேயி ஒருத்தியால் எல்லா மகளிரையும் தயரதன் வெறுத்தான் என்பதனை முன்னர்க் (1516) கூறினார். கைகேயிமேல் உண்டாகிய நெருப்பு அனைத்து மகளிரிடத்திலும் தங்கியிருப்பதாகக் கருதி ஐங்கணை அடரவும் ஆடவர் கொங்கையை அநுபவியாது விட்டனர். ஐங்கணை - மலர் அம்பு ஐந்து, தாமரை, முல்லை, மா, அசோகு, நீலோற்பலம்ஆகிய ஐந்து மலர்களும் மன்மதன் அம்புகளாகும். “கொல்” ஐயம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 51 பரதன் மரவுரி அணிந்து சத்துருக்கனனுடன் தேரில் சேறல் | 2295. | இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும், தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்; பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும், நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான். |
இன்னணம் - இவ்வாறு; நெடும்படை ஏக - பெருஞ்சேனை செல்ல; ஏந்தலும் - பரதனும்; தன்னுடைத் திரு அரை - தன்னுடைய அழகிய இடுப்பிலே; சீரைசாத்தினான் - மரவுரியைத் தரித்து; பின் இளையவனொடும் - பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் - (மனத்துள்) தோன்றியதுக்கத் தோடும்; நல்நெடுந் தேர்மிசை - நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல் மேயினான் - (வனத்துக்குச்) செல்லத் தொடங்கினான். |