‘திருஅரை சீரை சாத்தினான்’ என்றது இதுகாறும் சிறப்பு மிக்க பொன்னாடைகளை அணிந்தது என அதன் சிறப்பு உணர்த்தற்கு. மேலும் மேலும் பரதனுக்குத் துக்கம் பொங்குதலைப் ‘பிறந்ததுன்பொடும்’ எனக் குறித்தார். 52 தாயர் முதலியோர் பரதனுடன் வருதல் 2296. | தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின் ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும், தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப் போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே. |
தாயரும் - (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்; அருந்தவத்தவரும் - செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும்; தந்தையின் ஆயமத்திரியரும் - தன் தந்தையாகிய தயரதன் கண் பொருந்திய மந்திரிமார்களும்; அளவுஇல் சுற்றமும் -அளவிட முடியாத பலவாகிய சுற்றத்தார்களும்; தூய அந்தணர்களும் -தூய்மையான வேதியர்களும்; தொடர்ந்து சூழ்வர - தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர; திருநகர்ப் புரிசை வாயில் போயினன் - அழகிய அயோத்தி நகரத்து மதிலின் (முதன்மையான)வாயிலைச் சென்றடைந்தான். தந்தை போலப் பாராட்டத் தகும் மந்திரியர் என்றும் ஆம். அளவில் சுற்றம் -உறவினர்களையும், அரசச் சுற்றத்தையும் குறிப்பிடும். இராமனை அழைத்து வருதலில்அனைவர்க்கும் உள்ள ஆர்வ மிகுதி இதனால் புலப்படும். ‘ஏ’ காரம் ஈற்றசை. 53 சத்துருக்கனன் கூனியைத் துன்புறுத்தப் பற்றவே, பரதன் விலக்கல் 2297. | மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும் உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும், சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்; |
இளவல் - நால்வரினும் இளையவனாகிய சத்துருக்கனன்; வழிச் செல்வாரொடும் -(இராமனைக் கண்டு அழைக்கக் காடு நோக்கி) வழிச்செல்லும் அவர்களோடு; மந்தரைக் கூற்றமும்- மந்தரையாகியயமனும்; உந்தியே போதல் கண்டு - மற்றவர்களைத் தள்ளிக்கொண்டுமுந்திச் செல்லுதல் கண்டு; ஓடி - விரைந்து சென்று; ஆர்த்து - பேரொலிசெய்து; அழன்று - கோபித்து; அந்தரத்து எற்றுவான் - ஆகாயத்தில் மேலே வீசுமாறு; பற்றலும்- (கையாற்) பற்றிக் கொள்ளுதலும்; சுந்தரத் தோளவன்- அழகிய திருத் தோள்களை உடைய பரதன்; விலக்கி - (அவ்விடத்திலிருந்த மந்தரையை); விடுவித்துச் சொல்லுவான் - (தம்பிக்குச்) சொல்லலானான். |