சீற்றத்தான்- மேல் எழுந்த கோபம் உடையவனாய் தென்கரை வந்து தோன்றினான் (2313.) பரதன் சேனையோடு வடகரை அடைந்தான். குகன் தென்கரையில் தோன்றினான். பரதனையும்சேனையையும் கண்டு ஐயப்பட்டுச் சீறுகிறான். அடுத்த செய்யுளின் முதற்கண் ‘குகன் எனப் பெயரியகூற்றின் ஆற்றலான்’ என்பதனை இங்குக் கொண்டு பொருள் முடிக்க. இதுமுதல் ஆறு பாடல்கள் தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்’ என்கின்ற இப்படலத்துப் பதினொராம்பாடலில் முடியும். ‘ஏ’ வினா? ‘கொல்’- ஐயம். ‘ஆம்’அசை 6 | 2309. | குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான் தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் - நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில் புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான். |
குகன் எனப் பெயரிய - குகன் என்ற பெயரை உடைய; கூற்றின் ஆற்றலான் - யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்; தொகை முரண் சேனையை - கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்) சேனையை; துகளின் நோக்குவான் - ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்; நகை மிக - (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற - கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற - (உள்ளே எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெறிவர; குனிப்புறும் - (கோபத்தால்) மேலேறிவளைந்த; புருவப் போர்விலான் - புருவமாகிய போர்க்குரிய வில்லை உடையனானான். மேல் பாட்டில் ‘எடுத்த சீற்றத்தான்’ என்றார். குகனுக்கு வந்த சீற்றத்தின்மெய்ப்பாடுகளை இங்கே கூறினார். சேனை வருவதை முன்னவர் வந்த ‘துகளினால்’ பார்த்தறிந்தான்என்றலும் ஒன்று. ‘புருவப் போர்வில்’ என்றது உருவகம். புருவத்துக்கு வில் உவமை. வளைதல்தன்மையால்; போர்க்கு மேலும் வளைப்பர். அதுபோல இங்கே கோபத்தால் புருவம் மேலேறி மேலும்வளைந்தது. அதனால், ‘போர்விலான்’ என்றார். இனி அவன் சீற்றம் தொடர்வதைத்தொடர்ந்து கூறுகிறார். 7 | 2310. | மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான் ஐ - ஐந் நூறாயிரம் உருவம் ஆயின மெய் உறு தானையான், வில்லின் கல்வியான். |
மை உற - தீமை உண்டாக; இறுதி உயிர் எலாம் வாங்குவான் - இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின் உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறுகவர் அயில் பிடித்த காலன் தான்- கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே; |