பக்கம் எண் :

588அயோத்தியா காண்டம்

- அழகிய; ஐ நூறாயிரம் உருவம் ஆயின - ஐந்து  இலட்சம் வடிவம்
எடுத்தாற் போன்ற;  உறு மெய் தானையான் - வலிய உடம்புடைய
சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் - வில்வித்தையில்
தேர்ந்தவன்.

     ‘ஐ - இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர்’ என (1983) முன்னர்க்
கூறியது,  இருபதோடு ஐந்துவைத்துப் பெருக்க நூறு ஆகும். நூறு
ஆயிரவர் எனக் கூட்ட இலட்சம் ஆகும். முன்னர் உள்ள ‘ஐ என்றஐந்தால்
முரண ‘ஐந்துலட்சம் சேனை’ என வரும். அது  நோக்கி, இங்கும்
‘ஐந்நூறாயிரவர்’என்பதற்குப் பொருள் உரைத்தாம். முன்னர் உள்ள ‘ஐ’
அழகு, வியப்பு என்னும் பொருள் பற்றிவந்தது. எண் பற்றி வந்ததன்று.
எண்ணாகக் கொள்ளின் முன்பாடற் றொகையோடு மாறுபடும் ஆதலின்
என்க. குகனது சேனை வீரர்கள் காலனை ஒத்தவர்கள் என்று அவனது
சேனைப் பெருமை கூறினார்.                                      8

2311.கட்டிய கரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
‘கிட்டியது அமர்’ எனக் கிளரும் தோளினான்.

     கட்டிய - (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; கரிகையன் -
உடையவாளை உடையவன்; கடித்த வாயினன் - (பற்களால்) உதட்டைக்
கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன்- கடுமையாகப் பேசும்
சொற்களை உடையவன்;  விழிக்கும் தீயினன்- (கண்கள்) விழித்துப்
பார்க்கும் நெருப்புத் தன்மை  உடையவன்;  கொட்டிய துடியினன் -
அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்;  குறிக்கும் கொம்பினன் -
(போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘அமர்
கிட்டியது’
- ‘போர் அருகில்வந்துவிட்டது;’ எனக் கிளரும் தோளினான்-
என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன் (ஆகி..)
(வரும் பாடலில் முடியும்).

     உதட்டைப் பற்களால் கடித்தலும்,  உரத்த சத்தமிட்டுக் கடுமையாகப்
பேசுதலும், கண்கள்கனல் சிந்தச் சிவந்து  பார்த்தலும் கோபத்தின்
மெய்ப்பாடுகளாம். போர் கிடைத்தால்வீரர்களாயிருப்பார் மகிழ்தல் இயல்பு.
‘கிட்டியது அமர்’ என்றதால் குகனது  தோள்கள்கிளர்ச்சியுற்றன எனற்ார்.
“போரெனில் புகலும் புனைகழல் மறவர்” (புறம் 31) என்பதும் காண்க.
துடியும், கொம்பும் போர்க்காலத்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட
எழுப்பப்படும்வாத்தியங்களாகும். எனவே, இப்பாடலால் குகன் போருக்குச்
சித்தமானான் என்பதைக்கூறினார்.                                 9

2312.‘எலி எலாம் இப் படை; அரவம், யான்’ என,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் -
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே.