பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 59

களை;  ஒல்லையின் - விரைவாக;  இயற்றி - செய்து;  (அதன்மேல்) நல்
உறுதி
- நல்ல அரசியல் அறமாகிய; வாய்மையும் - உண்மைகளையும்; 
பெரிது சொல்லுதி -மிகவும் சொல்வாயாக;  என - என்று தொழுது -
வணங்கி; சொல்லினான் -சொன்னான்.

     பட்டாபிஷேகம் செய்வதற்குரிய முகூர்த்த தினமும், தினசுத்தமும், 
கோளும் நாளும்  நன்னிலைநிற்க அமைதலும் முதலியன வேண்டுதலின்
அது மிக அரிதாகவே அமைதலின்,  நாளைக்கே நல்லியல் மங்கலநாள்
என்றனர் கணிதநூல் வல்லோர். உடனே செய்ய வேண்டிய முடிசூட்டு
விழாவிற்கு  முன்னதாகிய சடங்குகளைவிரைவில்  செய்ய வேண்டுதலின்
‘ஒல்லையின் இயற்றி’ என்றான். ஆசிரியனாக இருந்து கற்பித்தான்ஆதலின்
அரசியல் உறுதிகளை எடுத்துரைக்க வசிட்டனை வேண்டினான் தயரதன். 11

இராமன் தன் திருமனையில் வசிட்டனை வரவேற்றல்  

1410.முனிவனும், உவகையும் தானும் முந்துவான்,
மனுகுல நாயகன் வாயில் முன்னினான்;
அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும்,
இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான்.

     முனிவனும் - வசிட்டனும்;  உவகையும் தானும் முந்துவான் - தன்
மகிழ்ச்சிக்குத்தான் முற்பட்டுச் செல்வானாய்; மனுகுல நாயகன் -
வைவஸ்வத மனுவின் வமிசத்தில் தோன்றியஇராமனது;  வாயில் -
அரண்மனை வாயிலை; முன்னினான் - அடைந்தான்;  அனையவன் -
அந்த வசிட்டனது;  வரவு கேட்டு - வருகையைக் கேள்வியுற்று; அலங்கல்
வீரனும்
- மாலையணிந்த இராமனும்; இனிது  - இனிமையாக;
எதிர்கொண்டு -வரவேற்று (அழைத்துக் கொண்டு)தன் இருக்கை - தன்
இருப்பிடத்தை;  எய்தினான் - அடைந்தான்.

     மனு குலம் - மக்கள் குலம் என்றுமாம்.  உவகையும் தானும் என்றது
வசிட்டனது  மகிழ்ச்சியோ,அவனோ முன்னாற் சென்றனர் என அறிய
முடியா வண்ணம் ஆர்வத்துடன் விரைவாகச் சென்றான் என்பதாம்.
பெரியோரை எதிர் கொண்டு அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தித்
தாம் அமர்தல் என்பதுஆன்றோர் ஆசாரம். முந்துவான் - முந்தி -
முற்றெச்சம்,  அலங்கல் - அசைதல் - அத்தொழிலையுடையமாலைக்கு
ஆகுபெயர்.                                                  12

வசிட்டன் இராமனிடம் ‘உனக்கு நாளை முடிசூட்டு விழா’ எனல்  

1411.ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்;
‘புல்கு காதல் புரவலன், போர் வலாய்!
நல்கும் நானிலம் நாளை நினக்கு’ என்றான்.