பக்கம் எண் :

கங்கை காண் படலம் 591

மேலும்; கூறுவான் - சில வீரவார்த்தைகளையும் சொல்லுவான் ஆனான்.

     ‘துடி’ என்பது ஈண்டுப் போர்ப்பறைகளுக்கு உபலக்கணம். துடியொன்று
கூறவே மற்றப் பறைகளும் கொள்ளப்பட்டன. பரதனது சேனை இராமன்மேல்
படையெடுத்து வந்துள்ளதாகக் குகன் கருதினான் ஆதலின், அச்சேனை
தென்கரை அடையாதபடி எச்சரிக்கையாகத் தன் சேனைகளுக்குக் கட்டளை
இடுகிறான் என்க. மேலும், அச் சேனை வீரர்கள் உற்சாகம் அடைவதற்காகச்
சில வார்த்தைகள் மேல் கூறுகிறான். ‘கடி எறி’ காவலாக வை
என்றுரைப்பதும் உண்டு; அது பிடி என்பதற்குப் பின் உரைப்பின்
பொருந்தும். ‘தோணிகள் ஓட்டாதீர்’ என்றான் ஆதலின் ‘விரைந்து
அலைவீசி ஓடும்’ கங்கையில் தோணிகள் உதவியின்றித் தென்கரை
அடைதல் இயலாது என்பதைப் பின்னர்க் கூறினான். அதனையும் மீறித் தம்
ஆற்றலால் வருவாரைப் ‘பிடி’, ‘பட எறி’ என்பது அதன்பின் கூறப்பட்டது.
குகனது ஆற்றொழுக்கான சிந்தனை யோட்டத்தை இப்பாடல் சுட்டிச்
செல்கிற அழகு காண்க. ‘எறி’, ‘பிடி’ என வீரரைத் தனித்தனி நோக்கி
ஒருமையிலும், ‘ஓட்டலிர்’ எனக் கூட்டமாக பார்த்துப் பன்மையிலும்
கூறினான் என்க. இனி ஒருமை பன்மை மயக்கம் எனினும் அமையும்.    13

குகன் தன் சேனைகளுக்குக் கூறிய வீர வார்த்தை  

கலித்துறை

2316.‘அஞ்சன வண்ணன், என் ஆர்
     உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
     மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
     உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
     என்று, எனை ஓதாரோ?

     ‘என் ஆருயிர் நாயகன் - என் அரிய உயிர்த் துணைவனாகிய;
அஞ்சனவண்ணன்- மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய
இராமபிரான்; அரசு ஆளாமே - ஆட்சிஉரிமை எய்தாதபடி;
வஞ்சனையால் - சூழ்ச்சியால்;  எய்திய -(அவ்வரசாட்சியைக் கைப்பற்றி)
அடைந்த; மன்னரும் - அரசரும் (பரதரும்);  வந்தாரே - (இதோ
என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!;  தீ உமிழ்கின்றனசெஞ்சரம் -
நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்;  செல்லாவோ -
(இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?-; இவர் உஞ்சு போய்விடின்-
இவர்கள்(என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும்
இடத்துக்குப்) போய்விட்டால்; ‘நாய்க்குகன்’ என்று - (உலகோர்) குகன்
றாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்று;  எனை - என்னைப் பற்றி;
ஓதாரோ’ - சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்)