பக்கம் எண் :

592அயோத்தியா காண்டம்

     இவன் ஈடுபட்டது அவன் திருமேனி அழகில் ஆதலின், அது
தனக்கும் அவனுக்கும் ஒன்றாயிருத்தலின் ‘அஞ்சன வண்ணன்’ என்று இது
மேலிட்டு வந்தது என்க. இராமன் பெற வேண்டிய அரசைப் பரதன் பெற்றது
பற்றியது சீற்றம் என்பதைத் தெரிவித்தான். ‘நாய்’ என்பது ஒருவரைக்
கீழ்மைப்படுத்திப் பேசுதற்குப் பயன்படுவது ஆதலின் இங்கே ‘நாய்க்குகன்’
என்று உலகம் தன்னை இழித்துப் பேசும் என்றான். பரதன் படைகளைப்
போகவிடில் இராமன்பால் காட்டும் நன்றியுணர்வுக்கு மாறானது; அச்செயலைச்
செய்யும் குகனுக்கு நன்றியுணர்வி்ல் சிறந்த நாயைக் கூறலாமோ எனின்,
அற்றன்று, நாய் நன்றியுணர்விற் சிறந்ததாயினும் தன் வீட்டுக்குடையவன்பால்
காட்டும் நன்றியுணர்வைத் தன் வீட்டில் திருட வரும் திருடன் தனக்கோர்
உணவு கொடுத்த வழி அவன்பாலும் நன்றி காட்டிக் குரைக்காது ஒரோவழி
இருந்துவிடல் பற்றி அதன் நன்றியுணர்வும் சிறப்பின்மை கண்டு உலகம்
அதனைக் கீழ்மைப்படுத்திக் கூறுதல் தெளிவாம். ‘குகன் நாய்’ என்று
சொல்வதினும் ‘நாய்க் குகன்’ எனல் மேலும் இளிவரலாம். உரையினும்
‘பாவத்துக்கே’ கம்பர் இது போன்ற இடங்களில் முதன்மை தருதல்
வெள்ளிடை. ஏகார, ஓகாரங்கள் ஐய, வினாப் பொருளில் வந்துள்ளன.
‘மன்னர்’ என்பது இகழ்ச்சிக் குறிப்பு. உயர்சொல்தானே குறிப்பு நிலையால்
இழிபு விளக்கிற்று (தொல். சொல். சிளவி. சேனா. 27).                 14

2317.‘ஆழ நெடுந் திரை ஆறு கடந்து
     இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு
     விலங்கிடும் வில்லாளோ?
‘‘‘தோழமை” என்று, அவர்
     சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்” என்று
     எனை ஏசாரோ?

     ‘இவர் -; ஆழம் - ஆழத்தையும்;  நெடுந் திரை - நீண்ட பெரிய
அலைகளையும்  உடைய; ஆறு - கங்கையாற்றை;  கடந்து - தாண்டி;
போவாரோ- அப்பால் ( தென்கரைப் பகுதிக்குச் ) செல்வார்களா?
(மாட்டார்);  வேழ நெடும்படை- யானைகளை உடைய நீண்ட பெரிய
சேனையை; கண்டு - பார்த்து (பயந்து);  விலங்கிடும்- புறமுதுகு காட்டி
விலகிச் செல்லுகின்ற;  வில் ஆளோ - வில் வீரனோ (நான்); ‘தோழமை’
என்று-
(உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல்-
அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ -
(காப்பாற்ற,மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா?
(அந்நட்புக்கு மாறாக இவர்களைப்போகவிட்டால்); ஏழைமை வேடன் -
அற்பனாகிய இந்த வேடன்;  இறந்திலன் -(இவ்வாறு இராமனோடு நட்புச்
செய்து, இப்பொழுது  சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும்பரதனோடு
நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும்
செய்தானிலனே; என்றுஎனை ஏசாரோ - என்றிவ்வாறு  உலகத்தார்
என்னைப் பழியாமல் விடுவார்களா - (பழிப்பர்)(தொடரும்)