‘போவாரோ’, ‘ஏசாரோ’ என்பனவற்றுள் எதிர்மறை இறுதியில் ஓகாரங்கள் ஐயவினாப் பொருளில் வந்துள்ளன. இனி இரண்டு எதிர்மறை உடன் பாட்டுப் பொருள் என்ற கருத்தில் ‘ஆ’ ‘ஓ’ என்ற இரண்டையும் எதிர்மறை எனக் கொண்டு கூறலும் ஒன்று. இவ்வாறே முன்னுள்ளவற்றிற்கும், பின்வருவனவற்றிற்கும் காண்க. “ தோழமை என்று அவர் சொல்லிய சொல்லைக்’ குகன் ‘செய்குவென் அடிமை’ (1969) என்றபொழுது அவன்கூறிய கொள்கை (தொண்டன்) கேட்ட அண்ணல், அதனை விலக்கி “யாதினும் இனிய நண்ப” (1970) என்றும், “என் உயிர் அனையார் நீ, இளவல் உன் இளையான், இந் நன்றுதலவள் நின்கேள்” (1988) என்றும், “முன்பு உளெம் ஒரு நால்வேம்.....இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்” என்றும் (1988) இராமன் கூறிவற்றைக் கொண்டு அறிக. “ ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது.....தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம். ‘தோழமை’ என்றது பண்பாகு பெயராய்த் தோழன் என்பதைக் குறித்தது. காட்டிலே வாழும் வேடுவராகிய தமக்கு “வேழ நெடும்படை” ஒரு பொருட்டல்ல என்பது கருதி அதனைக் கூறினான். “யானை உடைய படை காண்டல் முன்னினிதே” (இனியவை 5) என்பதும் காண்க. ‘ஏழைமை’ என்பது அறியாமைப் பொருளதாயினும் ஈண்டு எளிமை, அற்பம் என இகழ்பொருளில் வந்தது. 15 | 2318. | “முன்னவன்” என்று நினைந்திலன்; ‘மொய் புலி அன்னான் ஓர் பின்னவன் நின்றனன்” என்றிலன்; அன்னவை பேசானேல், என் இவன் என்னை இகழ்ந்தது? இவ் எல்லை கடந்து அன்றோ? மன்னவர் நெஞ்சினில், வேடர் விடும் சரம் வாயாவோ? |
‘இவன் - இப் பரதன்; “முன்னவன்” என்று நினைந்திலன் - (இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை; “மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்” - வலிமை நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக உடன் உள்ளான்; என்றிலன் - என்று கருதினானும் இல்லை; அன்னவை பேசானேல் -அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் - (இடையே கங்கைக் கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ - (இவன் இராமன்பால் போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?; வேடர் விடும் சரம் - வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர் நெஞ்சினில் - அரசர்கள் மார்பில்; வாயாவோ’ -தைத்து உள் நுழைய மாட்டாவோ? |