வடிவத்தைப் பார்த்தால்; அல் கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் - இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை உடையவன் (ஆகிய இத்தகைய குகன்); நெறி எதிர் - நீசெல்கின்ற வழியின் எதிரில்; நின்காணும் உள்ளத்தான் - உன்னைப் பார்க்கும் மனம் உடையவனாய்; நின்றனன் ‘என்றான் - நின்று கொண்டுள்ளான்’ என்று சொன்னான்சுமந்திரன். குகன் பரதனை எதிர்க்க நின்றவனே ஆயினும் இராமன்பால் பேரன்புடையவனாக அச்சுமந்திரனால்அறியப்பட்டவன் ஆதலால் இராமனை வரவேற்கச் செல்லும் பரதனை எதிர்பார்த்துக் கண்டு மகிழவே நின்றதாகச் சுமந்திரன் தன் போக்கில் கருதினான் என்க. பரதன் கங்கையின் வடகரைப்பகுதியில் கங்கைக் கரையோரமாக நில்லாமல் உள்ளே தள்ளி நிலப்பகுதியில் சிறிது தொலைவில் நிற்றலின் காண்பார்க்குக் குகனது சீற்றத் தோற்றம் புலனாகாமையும் பொதுத்தோற்றமே அறியப்படுதலும் உண்டாயிற்று. மேனி அழகாலும், நிறத்தாலும் இராமன், குகன், பரதன் மூவரும் ஓர் அணியாதல் பெறப்படும். 26 குகனைக் காணப் பரதன் கங்கையின் வடகரை அருகில் விரைதல் | 2329. | தன் முன்னே, அவன் தன்மை, தந்தை துணை முந்து உரைத்த சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலாத் திரு மனத்தான், ‘மன் முன்னே தழீஇக் கொண்ட மனக்கு இனிய துணைவனேல், என் முன்னே அவற் காண்பென், யானே சென்று’ என எழுந்தான். |
தன்முன்னே - தன் எதிரில்; அவன் தன்மை - அந்தக் குகனது நல்லியல்புகளை; தந்தை துணை - தன் தந்தையாகிய தயரதனின் நண்பனான சுமந்திரன்; முந்து உரைத்த - முற்பட்டுச் சொல்லிய; சொல்முன்னே - சொல்லுக்கும் முன்பாக;உவக்கின்ற - மகிழ்ச்சி அடைகின்ற; துரிசு இலாத் திரு மனத்தான் - குற்றம்சிறிதும் இல்லாத நல்ல மனத்தை உடையவனாகிய பரதன்; ‘மன் முன்னே தழீஇக் கொண்ட -நம் அரசனாகிய இராமன் வனம் புகுந்த முன்னமே (அன்பு செய்து) தழுவிக் கொண்டுள்ள; மனக்குஇனிய துணைவனேல் - அவன் மனத்துக்கு இனிய துணைவன் ஆனால்; என் முன்னே - என்னை(அவன் வந்து பார்ப்பதற்கு) முன்னமே; யானே சென்று அவற் காண்பென்’ - நானே(முற்பட்டு) சென்று அவனைக் காணுவேன்;’ என - என்று சொல்லி; எழுந்தான் -புறப்பட்டான். இராமன்பால் அன்புடையான் குகன் ஆதலின் அவனை முற்பட்டுச் சென்று காணப் பரதன்விரைந்தான். ‘இராமன் அன்பினால் குகனைத் |