பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 61

1413.‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,
உரிய தாமரை மேல் உரைவானினும்,
விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

     ‘அந்தணர் - வேதம் வல்ல வேதியர்; கரிய மாலினும் - கருநிற
உருவினனாயதிருமாலைக் காட்டிலும்; கண்ணுதலானினும் - நெற்றிக்
கண்ணுடைய சிவபெருமானைக் காட்டிலும்;உரிய தாமரைமேல்
உறைவானினும் -
தனக்கே உரிய திருவுந்தித் தாமரை மேல் 
வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும்;  விரியும் - பரந்து  விளங்கும்; 
ஓர் பூதம் ஐந்தினும்- ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும்; 
மெய்யினும் - சத்தியத்தைக் காட்டிலும்; பெரியர் - மேம்பட்டவர் ஆவர்;
(அவர்களை) உள்ளத்தால் - மனப்பூர்வமாக; பேணுதி - புறந்தருவாயாக.’

     மும்மூர்த்திகள் - உலகிற்கு நிமித்த காரணர் - பஞ்சபூதம்  உலகிற்கு
முதற் காரணம். அவற்றின் வேறுபடாதது  உலகம்.  அதனால், பௌதிகம்
எனப்பெயர் பெறும். மெய் - உலகிற்கு அடிப்படையாகிய காரணமாயிருந்து
உலகு இயங்கத் துணைபுரிவது ஆதலின் துணைக்காரணம் எனவும் கூறலாம்-
இவை அனைத்தினும்அந்தணர் உயர்ந்தோர்.  முத்தேவர்  உயர்ந்தவர்
என்பது  அனைவரும் அறிந்தது;  ஆகலின் அவரைவைத்து அந்தணர்
உயர்வை எடுத்துக் காட்டினர். ‘உரிய தாமரை’ பலர்க்கு உரியதாகாது
அவனுக்கேஉரிய தாமரை.  அது திருவுந்தித் தாமரை, மெய்யினும் பெரியர்
எனவே அவர்க்கு மெய் இன்றியமையாததுஎன்பதாம். ‘உள்ளத்தால்’ - ஆல்
‘ஒடு’ என்ற உடனிகழ்ச்சிப் பொருளில் வந்துள்ளது. இவ்வுருபு இப்பொருளில்
வருவது  இலக்கணத்தில் பழைய வழக்கு. பேணுதி - புறந்தருக.  அஃதாவது
பின்னின்றுகாத்தல்; குழந்தையைத் தாய் காக்குமாறு போலக் காத்தலாம்.
வேதியர்க்கு இருந்த சமுதாயச் செல்வாக்கினைஉணர்க.  இவ்வறவுரை
இப்படலத்து முப்பதாம் பாடலில் முடியும்.                         15

1414.அந்தணாளர் முனியவும், ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும், தேவருள்
நொந்து உளாரையும், நொய்து உயர்ந்தாரையும்,
மைந்த! எண்ண, வரம்பும் உண்டாம்கொலோ?

     ‘மைந்த! - மகனே!;  அந்தணாளர்  முனியவும் - வேதியர்கள்
வெகுளவும்; அவர் - அவ்வேதியர்; சிந்தையால் - மனத்தோடு பொருந்தி;
அருள் செய்யவும்- கருணை புரியவும்;  தேவருள் - தேவர்களுள்; 
நொந்து  உளாரையும் - வருத்தம்அடைந்தவர்களையும்;  நொய்து
உயர்ந்தாரையும்
- எளிதாக மேம்பட்டவர்களையும்;  எண்ண - கணக்கிட;
வரம்பும் உண்டோ - அளவும் இருக்கின்றதோ?’ (இல்லை என்றபடி)