குகன், இராமன் காலில் விழுந்து பணிவது முறையானாற் போல, பரதன் காலிலும் விழுந்து பணிந்தான் ஆதலின் தகும் என்க. இதனை விளக்கவே கம்பர் கவிக் கூற்றாகப் “புளிஞர்கோன் பொருஇல் காதல் அனையவற்கு அமைவின் செய்தான்; ஆர் அவற்கு அன்பிலாதார்? நினைவு அருங்குணங்கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல்” (2339) என்று தாமே முன்வந்து பேசுவாராயினர். பரதனது குணங்களில் ஈடுபட்டு அவனைப் பணிந்தான்; இராமகுணங்கள் எங்கிருந்தாலும் அங்குப் பணிதல் இராமனைப் பணிதலே அன்றோ? ஆகவே, அது தகாதது செய்ததாகாது; அமைவிற் செய்ததாகவே ஆகும். விடை கொடுத்த படலத்துத் தன் அடியனாய அனுமனை இராமன் “போர் உதவிய திண் தோளாய் பொருந்துறப் புல்லுக” (10351) என்று தன்னைத் தழுவிக் கொள்ளச் சொல்லியதையும் இங்குக் கருதுக. பொது நிலையில் முதற்காட்சியில் அண்ணனாகிய குகனைப் பரதன் வணங்கினான் என்றும், சிறப்பு நிலையில் இராம குணாநுபவத்தின் எல்லையைப் பரதன்பால் கண்ட குகன் இராமனிலும் மேம்பட்டவனாகக் கருதி வேறு எதுவும் நோக்காது அன்பினான் அடியற்ற மரம்போல் வீழ்ந்து கைகளைத் திருவடியிற் பூட்டி நெடிது கிடந்தான் என்றும் கொள்க. அங்ஙனம் கிடந்த குகனைப் பரதன் எடுத்துத் தழுவியதாகக் கம்பர் கூறாமையும் காண்க. “நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்” (2332) எனக் குகன் முன்னரே கூறுதலின், இராமன் “எழுதரிய திருமேனி” (656) உடையவனானாற்போல, “எள்ளரிய குணத்தாலும் எழிலாலும்.....வள்ளலையே, அனையா’னா (657) கிய பரதனும், ‘தீட்டரு மேனி மைந்தன்’ ஆயினன். “எழுது அரு மேனியாய்” (2105) என்று பள்ளி படைப் படலத்தின்கண் கூறியதை ஈண்டு ஒப்பு நோக்குக. 34 | 2337. | ‘தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை, ‘‘தீவினை” என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால், ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா! |
‘புகழினோய்! - புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு - (உன்) தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு; தாதை உதவிய - (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த; தரணி தன்னை - (கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து - தீயவினை வந்து சேர்ந்தது போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி - முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை - (வனத்துக்கு) வந்தாய்; என்ற போழ்து - என்ற காலத்தில்; தன்மை கண்டால் - (உனது) நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் - ஆராய்ந்தால்; ஆயிரம் இராமர் நின்கேழ்ஆவரோ - ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -. |