பக்கம் எண் :

கங்கை காண் படலம் 611

     தந்தைமட்டுமே அளித்த அரசை வெறுத்து வந்த இராமனிலும், தாயும்
தந்தையும் இணைந்து அளித்த அரசை வெறுத்த பரதன் மேன்மை புலப்பட
இவ்வாறு கூறினான். “தாமரைக் கண்ணன், காதல் உற்றிலன் இகழ்ந்திலன்“
(1382) என்ற இராமனது மனநிலையும், ‘தீவினை என்ன நீத்து’ என்ற பரதனது
மனநிலையும் ஒப்பிடுக. இவையெல்லாம் இராமபிரானைக் குறைத்துக்
கூறுவேண்டும் என்று குகன் கருதியதன்று; பரதனது மேன்மைக் குணத்தைப்
பாராட்டும் முகமாகக் கூறியதாம்; எங்ஙனமெனின் இத்தகைய
குணச்சிறப்புகளால் உயர்ந்த பரதனைப் பாராட்டப்படும்பொழுதும் “ஆயிரம்
இராமர்” என்று குகனுக்கு இராமனே அளக்கும் பொருளாய் வந்து நிற்பது
கொண்டு அறியலாம். “உள்ளத்தின் உள்ளதை உரையின் முத்துற, மெள்ளத்
தம் முகங்களே விளம்பும்” (6452) “அடுத்தது காட்டும் பளிங்குபோல்
நெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்” (குறள். 706) ஆதலின், பரதனது உள்ளத்
துன்பம் அவனது முகத்தில் நின்றபடியைச் ‘சிந்தனை முகத்தில் தேக்கி’
என்றுரைத்தார். ‘அம்மா’ என்பது வியப்பிடைச் சொல்.                35

2338. ‘என் புகழ்கின்றது, ஏழை
     எயினனேன்? இரவி என்பான்-
தன் புகழ்க் கற்றை,
     மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள்
     மரபினோர் புகழ்கள் எல்லாம்.
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் -
     உயர் குணத்து உரவுத் தோளாய்!

    ‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- உயர்த்த உத்தமக்
குணங்களையும்,  வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயின
னேன்
- அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? - எவ்வாறு
புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது;
புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா
போல்
- மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக்
கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை
நுங்கள் மரபினோர்  புகழ்கள் எல்லாம்
- எல்லா அரசர்களாலும்
பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய
அரசர்களது  எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் -
உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.

     ‘ஏழை எயினன்’ - குகன் தன்னடக்கமாகக் கூறிக்கொண்டான்.
சூரியனுக்குப் புகழ் என்பது ஆதலின் அதனைப் ‘புகழ்க்கற்றை’ என்றார்.
மரபினோர் புகழ்கள் முன்பு பேசப்பட்டன; இனி, பரதன் புகழே பேசப்படும்
என்பதாகும்.                                                  36