பக்கம் எண் :

62அயோத்தியா காண்டம்

     தேவர்களில் அந்தணர் சீற்றத்தால் நொந்தோர் பலர்;  அந்தணர்
கருணையால் மேம்பட்டோர் பலர். எனவே தேவரினும் பெரியர் அந்தணர்.
‘நிறைமொழி மாந்தர் பெருமை’ என்னும் குறள்(குறள்.28.)  உரையில்;
‘நிறைமொழி - அருளிக்கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப்
பயந்தே விடும் மொழி’  என்று  பரிமேலழகர் எழுதிய உரையை இங்குக்
கருதுக.  நொந்துளார்.  அகத்தியர்சபித்தலால் இந்திர பதவி பெற்ற நகுடன்
பாம்பாயினமை காண்க. மேம்பட்டார் - கௌசிக அரசன்,பிரம முனிவனாகி
விசுவாமித்திரனாய்ப்  புகழ்பெற்றமை  வசிட்டன் அருளால் ஆயினமை
காண்க. ஆங்கு,  ஆம்,  கொல் என்பன அசைகள்.                 16

1415. அனையர் ஆதலின், ஐய! இவ் வெய்ய தீ -
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி;
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்.

    ‘ஐய! - இராமனே; அனையர் ஆதலின் - (அந்தணர்) அத்தன்மையர்
ஆகையால்;  வெய்ய தீவினையின்நீங்கிய - கொடிய தீவினையிலிருந்து
விலகிய;  இம் மேலவர் - இந்த அந்தணரின்; தாள் இணை - திருவடி
இணைகளை;  புனையும் சென்னியையாய் - முடிமேல் சூடிக்கொண்டு;
புகழ்ந்து  ஏத்துதி - புகழ்ந்து துதித்து;  இனிய கூறி - இன்மொழிகளைக்
கூறிஅவர்களை உபசரித்து; ஏயின - அவர்கள் ஏவிய பணிகளை; நின்று -
இருந்து;  செய்தி  - செய்வாயாக.

     அந்தணரிடம் நடந்துகொள்ளவேண்டிய  முறைகளை இங்குக் கூறினார்
வசிட்டர்  என்க.  ‘ஆல்’அசை.                                  17

1416. ‘ஆவதற்கும், அழிவதற்கும், அவர்
ஏவ, நிற்கும் விதியும் என்றால், இனி
ஆவது எப்பொருள், இம்மையும் அம்மையும்
தேவரைப் பரவும் துணை சீர்த்ததே?

     ‘அவர் ஏவ - அந்தணர் ஆணையிட; ஆவதற்கும் - (ஒருவர்)
மேம்படுவதற்கும்; அழிவதற்கும் - அழிந்துபோவதற்கும்; விதியும் நிற்கும்-
விதியும் துணையாக நின்றுஉதவும்; என்றால்-;  இனி -;  இம்மையும் -
இவ்வுலகத்தும்; அம்மையும் - அவ்வுலகத்தும்;தேவரைப் பரவும்துணை-
பூசுரராகிய அந்தணரைத் துதிக்கின்ற அளவு; சீர்த்தது -சிறப்புடையது; 
ஆவது - பொருந்திய;  எப்பொருள் - எந்தப் பொருள்?’  (எதுவும்
இல்லை.)

     தெய்வங்களுக்கும்  கட்டுப்படாது  தன்வழியில்  செயற்படும் விதியும்
அந்தணர்க்கு  ஏவல் செய்யும் என்பதாம். ‘ஏ’ ஈற்றசை.              18