பரதன் வணங்க பரத்துவாசத முனிவர் ஆசி கூறி வினாவுதல் கலிவிருத்தம் 2375. | வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும் தந்தை ஆம் எனத் தாழ்ந்த, வணங்கினான்; இந்து மோலி அன்னானும் இரங்கினான், அந்தம் இல் நலத்து ஆசிகல் கூறினான். |
அம் மைந்தனும்- அந்தப் பரதனாகிய மகனும்; வந்த மா தவத்தோனை - (தன்னை எதிர்கொள) வந்த பெரியதவசியாகிய பரத்துவாச முனிவனை; தந்தை ஆம் என - (தன்) தந்தையைப் போலக் கருதி; தாழ்ந்து - (பணிவுடன்) விழுந்து; வணங்கினான் - வணக்கம் செய்தான்; இந்துமோலி அன்னானும் - சந்திரனைச் சடாமுடியில் தரித்த சிவபிரானை ஒத்த அம் முனிவனும்; இரங்கினான் - (பரதனிடம்) பிரிவு கொண்டவனாய்; அந்தம் இல் நலத்து ஆசிகள் -முடிவில்லாத நன்மைகளைத் தரவல்ல ஆசிமொழிகளை; கூறினான் - மொழிந்தான். இந்து - சந்திரன், மோலி - சடாமுடி. மௌலி என்பது மோலி என வந்தது. தவச்சீலமும்,சடாமுடியும், காமனைக் காய்தலும் உடைமையால் பரத்து வாச முனிவனுக்குச் சிவபிரான் உவமைஆயினார். 1 2376. | ‘எடுத்த மா முடி சூடி, நிண்பால் இயைந்து அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு உடுத்து நண்ணுதற்கு உற்றளது யாது?’ என்றான். |
(பின்பு முனிவன்) ‘ஐய! - பரதனே!; நின்பால் இயைந்து அடுத்த பேர்அரசு - உன்னிடம் வந்து தானே சேர்ந்த கோசல ராச்சியத்தை; நீ எடுத்த மாமுடி சூடி- நீ உயர்ந்த திருமுடியைச் சூடிக்கொண்டு; ஆண்டிலை - ஆளாமல்; மூசு தூசு உடுத்து -உடம்பைப் போர்த்து மரவுரியை உடுத்துக்கொண்டு; முடித்து - திரித்துக் கட்டின; வார் சடைக்கற்றையை - நீண்ட சடைத்தொகுதியை உடையவனாய்; நண்ணுதற்கு- வனத்தின்கன் வந்து பொருந்துதற்கு; உற்றுளது யாது?’ - நேர்ந்த காரணம் என்ன?; என்றான் - என்றுகேட்டான். எடுத்து - உயர்த்திய, உனக்கென்று உன் தாயால் எடுத்து வைக்கப்பெற்ற என்றும் ஆம்,மரவுரி உடம்பில் ஒட்டிப் பொருந்தாது ஆதலின் போர்த்தாற்போல் உள்ளது என்னும் பொருளில்‘மூசு’ என்று உரைத்தார். உற்றுளது என்பது இடைவந்து தேர்ந்தது என்னும் பொருளில் வந்துள்ளது. 2 |