விருந்து அமைப்பென்’ எனாச் சிந்தித்தான்- விருந்து செய்வேன் என்று தன மனத்தில் கருதினான். வேள்விச் செல்வன் ஆதலின் தேவர்களையும், பிறவற்றையும் வருவித்து விருந்து செய்யஇயன்றது என அறிக. ‘சேனைக் கமைப்பெண் விருந்து’ என்பது பரதனையும் உள்ளடக்கியதேயாம்;அன்றி, பரதன் விருந்து அருந்தாமையின் அவன் தவக்கோலம் கண்டு அவனை விடுத்துச் சேனையை மட்டுமே பரத்துவாசன் கருதினன் எனலும் ஆம். சேனை என்று கூறினும் உடன்வந்தார், தாயர்,பரிசனங்கள் அனைவரையும் கருதும் என்க. 6 2381. | துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது; பல் சனம், பிறந்து வேறு ஓர் உலகு வெற்றாரென, மறந்து வைகினர், முன்னைத் தம் வாழ்வு எலாம். |
துறந்த செல்வன் - (யான் எனது என்னும் அகப் புறப் பற்றுகளைக்) கைவிட்டு தவச்செல்வத்தையுடைய பரத்துவாசன்;நினைய - விருந்திட நினைத்த அளவில்; துறக்கம் - சுவர்க்க உலகம்; பறந்து வந்து படிந்தது- விண்ணிழிந்து வந்து காட்டில் தங்கியது; பல் சனம் -(சேனையின் உள்ள) பல மக்கள் கூட்டமும்; பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என - மறுபிறப்பு எடுத்து வேறு உலகத்தை அடைந்தவர்களைப்போல; முன்னைத் தம் வாழ்வு எலாம் -முன்னைய தம்முடைய வாழ்க்கைகளை எல்லாம்; மறந்து வைகினர் - மறந்து இன்பமார்ந்து இருந்தார்கள். சீரிய தவம் உடையோர் நினைத்த மாத்திரையானே அனைத்தும் நடக்கும் ‘வேண்டியவேண்டியாங்கு எய்தலான் செய்தவம், ஈண்டு முயலப் படும்” (குறள் 265.) என்றார் வள்ளுவரும்.வேறுலகு என்றது ஈண்டுச் சுவர்க்கமாகும். முன்னைய வாழ்வு என்றது அயோத்தியில் வாழ்ந்ததை. இராமனைப் பிரிந்த சோகமும் தொடர்ந்து வழிநடந்து வந்து பட்ட வருத்தமும் மறந்தபடி. ‘தான்’உரையசை. 7 2382. | நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என, அந்தரத்தின் அரம்பையர், அன்பினர், வந்து உவந்து எதிர் ஏத்தினர்; மைந்தரை, இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார். | நந்தல் இல் அறம் - எஞ்ஞான்றும் கெடுதல் இல்லாத அறத்தை; நன்தினர் ஆம் என - பெருகச் செய்து அதன் பயனாய சுவர்க்காதி இன்பங்களைத் துய்ப்பார் இவர் ஆம் என்று கருதி; அந்தரத்தின் அரம்பையர் - தேவருலகத்தில் உள்ள அரம்பை மாதர்; அன்பினர் - அன்புடையராய்; உவந்து வந்து - மகிழ்ச்சியுடன் வந்து; மைந்தரை - ஆடவர்களை; எதிர் ஏத்தினர் - வரவேற்றுக் கொண்டாடி; இந்துவின் |