பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 643

சுடர் கோயில்- நிலாவைப்போல ஒளி விளங்கும் அரண்மனைக்குள்;
கொண்டு ஏகினார் - அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

     நந்து என்னும் சொல் வளர்ச்சி, கேடு என்னும் இருபொருள்
உடையது. - நந்தல் - கெடுதல் - நந்தினர் - வளர்ச்சிபெற்றார் எனப்
பொருள் காண்க. ‘அறம் செய்து சுவர்க்கம் புக்கான்’ (தொல், சொல். சேனா.
கிளவி. 58.) என்பவாதலின் இங்ஙனம் கூறினார். ‘ஆம்’ என்பதை அசை
எனலும் ஆம்.                                                 8

2383.நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்;
தான மாமணிக் கற்பகம் தாங்கிய
ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார்.

     (அரம்பையர் மைந்தர்க்கு) நானம் - (கஸ்தூரி முதலியவற்றாலாய)
வாசனைப்பொடியை; நன்கு உரைத்தார் - நன்றாக உடம்பில் பூசினர்;
நளிர் வானிடை ஆன -குளிர்ந்த ஆகாயத்திடத்தில் உள்ள;  கங்கை
அரும்புனல்
ஆட்டினார். கங்கைநதியின் அரிய நீரால் முழுக்காட்டி;
தான மா மணிக் கற்பகம் - தேவருலகத்தில் உள்ளபெரிய அழகிய
கற்பக மரங்கள்; தாங்கிய - சுமந்த; ஊனம் இல் மலர் ஆடை -குறைவு
இல்லாத மலர்களால் ஆகிய ஆடையை; உடுத்தினார் - அணிவித்தார்கள்.

     நானம் - கஸ்தூரி. இங்கு அதுமுதலாகிய, கூட்டுப் பொருளாகிய
கண்ணம் குறித்தது. மலர் ஆடை -மலரே ஆடையாம்;  பூத்தொழில்
பொதிந்த ஆடையும் ஆம். தான - வண்மைக்குணம் உடைய (கற்பகம்)என
உரைத்தலும் ஒன்று.                                             9

2384. கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்,
செம்பொனின் கல ராசி திருத்தினார்;
அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும்,
உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார்.

     கொம்பின்- பூங்கொம்பு போல; நின்று - வளைந்து நின்று; நுடங்குறு-
ஒல்கிஅசைகின்ற; கொள்கையார் - பண்புடைய;  அம்பரத்தின்
அரம்பையர் - வானுலக அரம்பை மாதர்;(மைந்தர்க்கு) செம்பொனின் கல
ராசி
- செம்பொன்னால் ஆகிய அணிகளை; திருந்தினார் - நன்கு
அணிவித்து; அன்பொடும் - பிரியத்தோடும்; உம்பர்கோன் நுகர் இன்
அழுது
- தேவேந்திரன் உண்ணக் கூடிய இனிய அமுத உணவினை;
ஊட்டினார் - உண்பித்தார்.

     கொம்பின் - ‘இன்’ உவம உருபு. கல ராசி - அணிகலன்களின்
தொகுதி; பல்வேறு அணிகள்.இந்திரன் உண்ணும் அமுதத்தை
இவ்வாடவர்களுக்கு அரம்பையர் ஊட்டினார் ஆம். உரைத்து, ஆட்டி,
உடுத்தி,  திருத்தி,  அழுது  ஊட்டினார் என்க.  மேல் முடியும்.        10