| | விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ?- புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால். |
‘இலக்குவ’ - இலக்குவனே!; நீ உலகம் ஓர் ஏழும் ஏழும் “கலக்கும்” என்பது கருதினால் - நீ பதினான்கு உலகங்களையும் நிலை கலங்கச் செய்வேன் என்பதைக் கருதிச்செயற்பட்டால்; அது - அச்செயல்; விலக்குவது அரிது - யாராலும் தடுத்தற்கரியது; அது விளம்பல் வேண்டுமோ? - அதைச் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை (உலகப்பிரசித்தமாய் அனைவரும் முன்பு அறிந்துள்ளதே); புலக்கு உரித்து- (அது கிடக்க,இப்போது) அறிவுக்கு உரிய; ஒரு பொருள் - ஒரு செய்தியை; புகல - (நான்உனக்குச்) சொல்ல; கேட்டி - கேட்பாயாக... பெருத்த வீர வார்த்தைகளைப் பேசிச் சினத்துடன் சீறி நிற்கும் இலக்குவன் பால்,பரதனைப் பற்றித் தெளிவுறுத்தத் தொடங்கும் இராமன் முதலில் உபதேசத்தைத் தொடங்காது, அவனதுசினத்தையும் பேராற்றலையும் மதித்துப் பாராட்டிப் பேசியது மனித இயல்புக்கு ஒத்து அமைந்தது பாராட்டத்தக்கது. புலக்கு - புலத்துக்கு - ‘அத்து’ கெட்டது. “கல்லார்ப் பிணிக்கும்” என்றகுறளில், ‘நிலத்துக்கு’ என்பது ‘நிலக்கு’ என்று நின்றாற் போல. (குறள். 570.) செய்யுள்விகாரம் என்பர் பரிமேலழகர் - புலம் என்பது அறிவு. சினம் மிக்குழி அறிவு எழாது ஆதலின் -சினத்தை அடக்கி அறிவினால் சிந்தித்தல் வேண்டும் என்பது உணர்த்தினானாம். ‘ஆல்’ஈற்றசை. 42 | 2417. | ‘நம் குலத்து உதித்தவர், நவையின் நீங்கினர் எங்கு உலப்புறுவர்கள் ? எண்ணின், யாவரே தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?- பொங்கு உலத் திரளொடும் பொருத தோளினாய்! |
பொங்கு - வளர்ச்சியடைந்து; திரள் உலத்திரளொடும் - திரண்ட கல்தூணுடனே; பொருத - மாறுபட்ட (அதனினும் சிறந்த); தோளினாய்! - தோளினைஉடையவனே!; நம் குலத்து உதித்தவர் - நம்முடைய சூரிய குலத்தில்தோன்றியவர்களாகிய; நவையுள் நீங்கினர் - குற்றத் திலிருந்து நீங்கிய அரசர்கள்;எங்கு உலப்புறுவர்கள்? - எவ்வாறு அளவிடப்படக்கூடியவர் (அளவிடமுடியாதவர்); எண்ணின் - யோசிக்கும் இடத்து; தம் குலத்து ஒருவ அரும் - தம் குலத்தில்விட்டு விலக முடியாத; தருமம் நீங்கினன் - அறத்திலிருந்து நீங்கியவர்கள்; யாவரே - யார்?...... (ஒருவரும் இல்லை என்றபடி) அளவிடல் என்பது எண்ணிக்கையான் அன்று; அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகை ஆற்றலால்அளவுபடாதவர் என்றவாறாம். பொங்கு உலத்திரள் - பெரியதாகிய கற்றூண் எனலும் ஆம். 43 |