| 2418. | ‘எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன, பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே; அனைத் திறம் அல்லன அல்ல; அன்னது நினைத்திலை, என் வயின் நேய நெஞ்சினால். |
‘பனைத் திரள் கரக் கரிப் பரதன் - பனைமரம் போலத் திரண்ட கையை உடையயானையை யுடைய பரதனது; செய்கையே - ஒழுக்கங்களே; மறை எனைத்து உள அவை -வேதங்கள் எத்தனை உள்ளன அத்தனை வேதங்களும்; இயம்பற்பாலன - சொல்லுந்தன்மையஆவன; அனை அல்லன திறம் அல்ல - அத்தன்மையவாக நீ கூறும் அறமல்லாதன அல்ல (அவன்செய்கை); அன்னது - அவ்வுண்மையை (பரதனது சீரிய ஒழுக்க உயர்வினை); என் வயின்- என்னிடத்துண்டாகிய; நேய நெஞ்சினால் - அன்பு மீக்கூர்ந்த மனத்தால்; நினைத்திலை- நீ அறிந்து நினைத்தாயில்லை... வேதங்களாற் சொல்லப்படும் ஒழுக்கம் அனைத்தும் பரதன் ஒழுக்கமே என்றானாம். பரதனதுசிறப்பின் உண்மைத்தன்மையை இலக்குவன் அறிந்துணராமைக்குக் காரணம் அவன் இராமன்பாற் கொண்டமிக்க அன்பேயன்றிப் பரதனிடம் எந்த மாறுபாடும் இல்லை என்ற இராமன் கூற்று இலக்குவனையும்குறைகாணாது சாந்தப்படுத்திய தாயிற்று. ‘அனை’ என்றது ‘அ’ என்ற கட்டின் பொருளது.“அனைநிலைவகை” (தொல். பொருள். நச்.) என்றவிடத்து ‘அனை’ ‘கூட்டுநிலை’ என்றார்நச்சினார்க்கினியரும். ‘செயற்கையே’ என்ற ‘ஏ’ காரம் தேற்றப் பொருளில் வந்தது. 44 | 2419. | ‘ “பெருமகன் என்வயின் பிறந்த காதலின் வரும் என நினைகையும், மண்ணை என்வயின் தரும் என நினைகையும்” தவிர, “தானையால் பொரும்” என நினைகையும் புலமைப்பாலதோ? |
“பெருமகன் - பரதன்; என்வயின் பிறந்த காதலின் - என்னிடத்து உண்டாகிய அன்பினால்; வரும் என நினைகையும் - (காடு நோக்கி) வருகின்றான் என்றுநினைப்பதும்; மண்ணை - கோசல அரசை; என்வயின் - என்னிடம்; தரும் எனநினைகையும்” - தருவான் என நினைப்பதும்; தவிர - நீங்க; “தானையால் -சேனைகளால்; பொரும் - போர் செய்வான்; என நினைகையும்” - என்றுநினைப்பதும்; புலமைப்பாலதோ? - அறிவின்பாற் பட்டது ஆகுமோ?... (அன்று என்றபடி) அன்பு முதிர்ந்தவழி அறிவு தொழிற்படாது ஆதலின், என் வயின் நேயம் மீதூர்ந்ததால்பரதனை அறிவால் அறிய இயலாதவன் ஆனாய் என்று இதற்கும் ஓர் அமைதியை இலக்குவனுக்கு முன்பேகூறியது காண்க. “காதல் மிக்குழிக்கற்றவும் கைகொடா” (சிந்தா- 1632.) என்பது ஈண்டுநினைக்கத் தருவது, பரதன் வருவதன் உண்மை இராமனால் தெளிவாக இலக்குவற்கு உணர்த்தப்பட்டது. 45 |