தழுவிக்கொண்டாற் போல; அயா உயிர்த்து - பெருமூச்சு விட்டு; அழு கண் நீர் - அழுகின்ற கண்களிலிருந்து வரும் நீர்; மார்பிடை - மார்பிடத்தில்; அருவிஉயாவுற - அருவிபோலத் தழுவிப்பெருக; திரு உளம் உருக - உள்ளே அழகிய மனம்கரைந்துருக; புல்லினான் - (பரதனைத்) தழுவினான். கருணைக் கடவுள் - இராமன், அறக்கடவுள் - பரதன். இராமன் பரதனைத் தழுவியது கருணை அறத்தைத் தழுவியது போலாகும். அறம் செயற்பாடு - கருணை - பயன்பாடு. காரணமின்றிப் பிறவுயிர் படும் துன்பம் கண்டு பெருகி வரும் இரக்கம் தயாவாகும். இறைவனைத் ‘தயாமூல தன்மம்’ என்பர் அப்பர் திருநா. 6-20: 6) இங்கே தயாமுதல் எனப்பெற்றது. புறத்தேயும் அகத்தேயும் உருகியது கண்ணீராலும், திருவுளம் உருக அயாவுயிர்த்ததாலும் புலனாயிற்று. ‘ஏ’ காரம் - ஈற்றசை. 55 இராமன் தந்தை இறந்தமை கேட்டு அறிந்து கலங்குதல் | 2430. | புல்லினன் நின்று, அவன் புனைந்த வேடத்தைப் பல்முறை நோக்கினான்; பலவும் உன்னினான்; ‘அல்லலின் அழுங்கினை; ஐய! ஆளுடை மல் உயர் தோளினான் வலியனோ?’ என்றான். |
புல்லினன் நின்று - தழுவி நின்று; அவன் புனைந்த வேடத்தை - அப்பரதன்அணிந்திருந்த மரவுரியாகிய தவவேடத்தை; பல் முறை - பலமுறை; நோக்கினான் - உற்றுப் பார்த்து; பலவும் உன்னினான் - பலபடியாகக் கருதி; ‘ஐய! -பரதனே; அல்லலின் அழுங்கினை - துன்பத்தால் மிகவும் சோர்ந்துள்ளாய்; ஆளுடை மல்உயர் தோளினான்- ஆளுதலுடைய மற்போரிற் சிறந்த தோள் உடையவனாகிய தயரதன்; வலியனோ? - திடமாக இருக்கின்றானா?; என்றான்- என்று வினாவினான். பன் முறை நோக்கல், பலவும் உன்னுதல் என்பது பரதனது வேடம், துக்கம், வந்துள்ள நேரம் இவைபற்றி இராமனுக்கு எழுந்த சிந்தனைகளாம். ‘வலியனோ’ என்பது ‘நலமாக உள்ளானா’ என்ற விசாரிப்பு. இப்பொருளில் இது வருதலை, “வலிய என்றவர் கூற மகிழ்ந்தனன்” (2104) என்பது கொண்டு அறிக. 56 | 2431. | அரியவன் உரைசெய, பரதன், ‘ஐய! நின் பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக் கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்’ என்றான். |
அரியவன் - அறிதற் கரியவனாய இராமன்; உரை செய - வினாவ; பரதன்-; ‘ஐய! - இராமனே!; நின் பிரிவு என்னும் |