பிணியினால்- நின்னைப் பிரிந்த பிரிவு என்னும் நோயினாலும்; என்னைப் பெற்ற அக் கரியவள் -என்னை ஈன்றெடுத்த அந்தக் கொடியவளாய கைகேயியின்; வரம் எனும் காலனால் - வரம்என்கின்ற யமனாலும்; தனக்கு உரிய மெய் நிறுவிப்போய் - தனக்குரிய சத்தியத்தைஉலகில் நிலைநிறுத்திச் சென்று; உம்பரான்” - (இப்போது) தேவர் உலகத்தில் உள்ளான்; என்றான் - இறப்பிற்குக் காரணம் வேண்டும்; அது இராமனைப் பிரிந்த பிரிவு என்னும் நோய் ஆயிற்று. யமன் - கைகேயி பெற்ற வரம். தயரதன் வாய்மையைக் காப்பாற்றி உயிர் துறந்தான் என்பதை இங்ஙனம் கூறினான் பரதன். 57 | 2432. | ‘விண்ணிடை அடைந்தனன்’ என்ற வெய்ய சொல், புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம், கண்ணொடு மனம், கழல் கறங்கு போல ஆய், மண்ணிடை விழுந்தனன் - வானின் உம்பரான். |
வானின் உம்பரான் - விண்ணுலகத்துக்கும் மேல் உள்ள வீட்டிற்கு உரியவனாகியஇராமன்; ‘விண்ணிடை அடைந்தனன்’ என்ற வெய்ய சொல் - தயரதன் விண்ணுலகு அடைந்தான்என்ற கொடிய வார்த்தை; புண்ணிடை அயில் எனச் செவி புகா முனம் - புண்ணில் வேல் சொருகினாற் போலத் தன் காதில் நுழையும் முன்பே; கண்ணொடு மனம் - கண்ணும்மனமும்; கழல் கறங்கு போல ஆய்- கழல்கிற காற்றாடி போலச் சுழன்று; மன்னிடைவீழ்ந்தனன் - பூமியில் விழுந்தான். பரதன் கொண்டிருந்த தவ வேடத்தாலும், அவனது வாடிய மேனி வருதத்தாலும் புண்ணுற்ற இராமன் மனத்தில் தயரதன் இறந்த செய்தி வேல் இட்டாற் போன்று ஆயி்ற்று. வானின் உம்பரான் ஆயினும் தான் கொண்ட அவதார வேடத்திற் கேற்பத் துன்பத்திற் கலங்கினன் என்க. 58 | 2433. | இரு நிலம் சேர்ந்தனன்; இறை உயிர்த்திலன்; ‘உரும் இனை அரவு’ என, உணர்வு நீங்கினான்; அருமையின் உயிர் வர, அயாவுயிர்த்து, அகம் பொருமினன்; பல் முறைப் புலம்பினான் அரோ; |
(இராமன்) இரு நிலம் சேர்ந்தனன் - மண்ணில் விழுந்து; இறை - சிறிதளவும்; உயிர்த்திலன் - மூச்சுவிட்டானில்லை; ‘உரும் இனை அரவு’ என -இடியால் வருந்தும் பாம்பு போல; உணர்வு நீங்கினான் - உணர்ச்சி நீங்கப் பெற்றான்; அருமையின் - மிகச் சிரமமாக; உயிர் - உயிர்ப்பு உளதாக; அயாவுயிர்த்து- பெருமூச்சுவிட்டு; அகம் பொருமினன் - உள்ளே கலங்கி; பல் முறை புலம்பினான்- பலபடியாகச் சொல்லிப் புலம்பலானான். |