| | வன் தடக் கைத் தம்பியரும், வந்து அடைந்த மன்னவரும், சென்று எடுத்துத் தாங்கினார்; மா வதிட்டன் தேற்றினான். |
என்று எடுத்துப் பற்பலவும் பன்னி - என்று மிகுந்த குரலாற் பல பலவார்த்தைகளையும் திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லி; இடர் உழக்கும் -துன்பத்தில் மூழ்கியுள்ள; குன்று எடுத்த போலும் குலவுத் தோள் கோளரியை - மலையைத்தூக்கி நிறுத்தினாற் போலும் திரண்ட தோள்களையுடைய சிங்கம் போன்ற இராமனை; வன்தடக்கைக் தம்பியரும் - வலிய பெரிய கைகளை உடைய தம்பிமார் மூவரும்; வந்து அடைந்தமன்னவரும் - (அங்கு) வந்து சேர்ந்த அரசர்களும்; சென்று - நெருங்கி; எடுத்து - தூக்கி அணைத்து; தாங்கினார் - பரிகரித்தார்கள்; மா வதிட்டன்- பெருமையுடைய வசிட்ட முனிவன்; தேற்றினான் - தேறுதல் வார்த்தைகளைக் கூறினான். வசிட்டன் - இந்திரியங்களை வசப்படுத்தியவன், ஞானத்திற் குடி கொண்டவன், பிரம ஒளி மிக்கவன் என்று பொருள். மன்னர்கள் பின் வந்து சேர்ந்தனர் என்பதை ‘வந்து அடைந்த மன்னவர்’ என்பதனால் அறியலாம்.67 | 2442. | பன்ன அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம் பின்னு சடையோரும், பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும், மந்திரியர் எல்லாரும், வந்து அடைந்தார்; தன் உரிமைச் சேனைத் தலைவோரும்தாம் அடைந்தார். |
பன்ன அரிய - சொல்லுதற்கு அரிய; நோன்பின் - தவத்தை உடைய; பரத்துவனே ஆதி ஆம் - பரத்துவாசன் முதலாக உள்ள; பின்னு சடையோரும் -திரித்துவிட்ட சடையை உடைய முனிவர்களும்; பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும் - ஓர்ஏழு உலகங்களின் அரசர்களும்; மந்திரியர் எல்லாரும் - அமைச்சர்கள் எல்லாரும்; வந்து அடைந்தார் - வந்து சேர்ந்தார்கள்; தன் உரிமைச் சேனைத் தலைவோரும் தாம்அடைந்தார் - சக்கரவர்த்திகளுக்குரிய சேனையின் தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள். பரதனுடன் வந்தோர் பலரும் பின்னர் வந்து சேர்ந்தனர். ஆதலின், அவர்கள் எல்லாம்இராமனை நெருங்கினபடியை இதனாற் கூறினார் ‘தாம்’ என்பது உரையசை. 68 |