என்றபோது - என்றால்; எண் முதல் உயிர்க்கு -இவற்றைவிட எளிய முதற்பொருளாகிய; உயிர்க்கு - உயிர் அழிந்துபடுவதற்கு; நீஇரங்கல் வேண்டுமோ? - நீ வருந்துதல் தகுதியாகுமோ? (தகுதியன்று என்றபடி). ஐம்பூதங்களின் சேர்க்கையால் அனைத்துப் பொருள்களும் உண்டாவன ஆதலின், “பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன” பூதங்களே அழிகிறபோது பூதங்களால் ஆகிய பௌதிகமாய உடல் அழிந்து உயிர் பிரிதல் எளிதன்றோ என்றதாம். ‘எண்முதல்’ நினைத்தற்குரிய முதலாகிய உயிர் எனவும் அமையும். நினைத்தற்குரிய பூதங்களே அழிகின்ற தெனின் நினைத்தற்குரிய உயிர் பிரிதற்கு வருந்த வேண்டுமோ என்றாராம். 74 | 2449. | ‘புண்ணிய நறு நெயில், பொரு இல் காலம் ஆம் திண்ணிய திரியினில், விதி என் தீயினில், எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால், அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ? |
‘அண்ணலே! - தலைமை பொருந்தியவனே!; புண்ணிய நறுநெய்யில்- புண்ணியம்என்கின்ற நல்ல நெய்யில்; பொரு இல் - ஒப்பற்ற; காலம் ஆம் திண்ணியதிரியினில் - காலமாகிய வலிய திரியில்; விதி என் தீயினில் - விதிஎன்கின்ற நெருப்பினால்; எண்ணிய - கருத்தோடு ஏற்றப்பெற்ற; விளக்கு -உயிர் வாழ்க்கை என்கிற தீபம்; அவை இரண்டும் எஞ்சினால் - (நெய்யும் திரியுமாகிய)புண்ணியமும் விதியும் ஒழிந்தால்; அவிவதற்கு - அணைந்து போவதற்கு; ஐயம் -சந்தேகம்; யாவதோ? - ஏனோ? (இல்லை என்றபடி). நல்வினையும் விதியும் முடிந்தபொழுது உயிர்வாழ்க்கை முடிந்துபோகும். காலத் திரி விதி நெருப்பில் கரைந்து எரிந்து போகும். புண்ணியம் அனுபவித்து வற்றும். உயிர் உடலைப் பிரியும்; இது இயற்கை நியதி என்றார். 75 | 2450. | ‘இவ் உலகத்தினும் இடருளே கிடந்த, அவ் உலகத்தினும் நரகின் ஆழ்ந்து, பின் வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள், எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ? |
‘(உயிர்) இவ் உலகத்தினும் - இம்மைக்கண்ணும்; இடருளே கிடந்து- துன்பத்திற் கிடந்து உழன்று; அவ் உலகத்தினம் - மறுமைக் கண்ணும்; நரகின்ஆழ்ந்து - நரகத்தில் அழுந்தித் துன்புற்று; பின் - பிறகு; செல்வினைதுய்ப்பன - கொடிய வினைப்பயனை அனுபவித்தற் குரியவாய; விரிந்த யோனிகள் -பல்வேறு வகையான பிறவிவகைகள்; எவ் அளவில் செல - எந்தக் கணக்கில் அடங்க; எண்ணல் ஆகுமோ? - என்னக் கூடுமோ? (கூடாது என்றபடி) |