சேந்த நின் கையினால்- சிவந்த நின் கைகளால்; கடன் எலாம் - நீர்க்கடன் எலாம்; ஒழுக்குதி -செலுத்துவாயாக;’ என்றான்-. இறந்தோரைக் கருதிச் செய்யும் கிரியைகளின் பலன், பித்ரு தேவதைகளைச் சார்கிறபடியால், உத்தமகதியை அடைந்தவர்களுக்கும் கிரியைகளும், நீர்க்கடன்களும் செய்ய வேண்டுதலின் அவற்றைச் செய்க என்றான் வசிட்டன். நீர்க்கடன் தருப்பணம். 78 | 2453. | ‘விண்ணு நிர் மொக்குகளின் விளியும் யாக்கையை எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்; கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய் மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான். |
‘நீ-; விண்ணு நீர் மொக்குளின் - ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையில் எழுந்தநீர்க்குமிழி போல்; விளியும் - (நிலையில்லாமல்) அழிகிற; யாக்கையை -உடம்பைக் குறித்து; எண்ணி அழுங்குதல் - சிந்தித்து வருந்துதல்; இழுதைப்பாலது- பேதைமையின்பாற் படுவதாகும்; கண்ணின் நிர் உகுத்தலின் கண்டது இல்லை - கண்ணீர்சொரிதலால் அடையும் பயன் ஒன்றும் இல்லை; நீ மலர்க்கையால் - நீ தாமரை மலர்போன்ற கைகளால்; மண்ணு நீர் உகுத்தி- (பாவத்தைப் போக்கித்) தூய்மை செய்யும் தருப்பண நீரைச் சொரிவாயாக;’ என்றான் - என்று வசிட்டன் கூறினான். துக்க மிகுதியால் கூறியும் இராமன் நீர்க்கடன் செய்ய எழாமையால் மீண்டும் - வசிட்டன் கூறவேண்டியதாயிற்று. மண்ணு நீர் - மண்ணில் நீர் உகுத்து என்னும் பொருள் பெரும். இழுதைப்பாலதால் - ‘ஆல்’ அசை. 79 இராமன் நீர்க்கடன் செய்து மீளுதல் | 2454. | என்றபின், ஏந்தலை ஏந்தி வேந்தரும், பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய்ச் சென்றனர், செறி திரைப் புனலில்; ‘செய்க’ என, நின்றனர்; இராமனும் நெறியை நோக்கினான். |
என்றபின் - என்று முனிவன் கூறிய பிறகு; ஏந்தலை ஏந்தி - இராமனைக்கொண்டாடி; வேந்தரும் - அரசர்களும்; பொன் திணிந்தன சடைப் புணிதனோடும் போய்- பொன்னைத் திணித்து வைத்தாற்போன்ற சடைகளை உடைய தவத்தோனாகிய வசிட்டனோடும் போகி;செறிதிரைப் புனலில் - நெருங்கிய அலைகளையுடைய நதிநீரில்; சென்றனர் -சென்று சேர்ந்தனர்; ‘செய்க’ என நின்றனர் - (இராமன் நீர்க்கடன்) செய்க என்று நின்றார்கள்; இராமனும் நெறியை நோக்கினான் - இராமனும் செய்யவேண்டிய வழிமுறைகளைச்சிந்தனையால் நோக்கினான்.. |