தாயரோடு சுமந்திரன் வருதல் | 2463. | தேன் தரும் தெரியல் அச் செம்மல் நால்வரை ஈன்றவர் மூவரோடு, இருமை நோக்குறும் சான்றவர் குழாத்தொடும், தருமன் நோக்கிய தோன்றல்பால், சுமந்திரன் தொழுது தோன்றினான். |
தேன் தரும் தெரியல் - தேனைச் சொரிகின்ற பூமாலை அணிந்த; அச்செம்மல்நால்வரை - அத்தலைமைப்பாடு உடைய இராமன், இலக்குவன்; பரதன், சத்துருக்கனன் என்றநான்கு பிள்ளைகளையும்; ஈன்றவர் மூவரோடு - பெற்ற தாயராகிய கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூவரோடும்; இருமை நோக்குறும் - இம்மை மறுமை என்னும் இரண்டையும்ஆராய்ந்து அறிகின்ற; சான்றவர் குழாத்தொடும் - பெரியோர் கூட்டத்தோடும்; தருமம் நோக்கிய தோன்றல் பால் - எப்பொழுதும் தருமத்தையே சிந்தித்துப்பார்த்திருக்கும் இராமன் இருக்குமிடத்தில்; சமந்திரன்-; தொழுது தோன்றினான் -வந்து வணங்கினான். ‘இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்” என்பதனுள், (குறள். 23.) பரிமேலழகர் உரைத்தவாறு ‘பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப வின்பத் தன்மைகளை ஆராய்ந்து அறிகிற’ எனப் பொருள் உரைப்பினும் அமையும். சுமந்திரன் தயரதனுக்கு முதல் அமைச்சனாய் இருந்து மூத்தோன் ஆயினும் இராமன் அரசன் ஆதலின் தொழுதல் முறை என்க. நால்வரை, மூவர், இருமை என நான்கு, மூன்று இரண்டு என்ற எண்கள் தொடாந்து வந்தது ஒரு நயம். 89 இராமனும் தாயரும் அழ, யாவரும் அழுதல் | 2464. | ‘எந்தை யாண்டையான் இயம்புவீர்?’ எனா, வந்த தாயர்தம் வயங்கு சேவடிச் சிந்தி நின்றனன், சேந்த கண்ண நீர்- முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான். |
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் - எல்லாவற்றிற்கும் முற்பட்டநான்முகனாகிய பிரமனுக்கும் முற்பட்டவனாகிய இராமன்; ‘எந்தை யாண்டையான் இயம்புவீர்’ எனா- என் தந்தை தயரதன் எங்குள்ளான் சொல்லுங்கள் என்று; வந்த தாயர்தம் வயங்கு சேவடி- தன்னை வந்தடைந்த தாய்மார்களது விளங்கிய திருவடிகளில்; சேந்த கண்ணநீர் - சிவந்த தன் கண்களிலிருந்து நீரை; சிந்தி நின்றனன் - சொரிந்து நின்றான். திரு உந்தியில் பிரமனைப் பெற்ற திருமாலின் அமிசமானவன் இராமன் ஆதலின், நான்முகத்தவற்கும் முந்தையான் ஆயினன், உலகியலில் இறந்தோரைப் பற்றி விசாரிக்கும் முறை இதுவாகலின் இங்ஙனம் தாயரை இராமன் விசாரித்தான். 90 |