| 2465. | தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ, ஒய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்; ஆய சேனையும், அணங்கனார்களும், தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார். |
தாயரும் - தாய்மார்களும்; தலைப்பெய்து - ஒன்று சேர்ந்து; தாம் தழீஇ - தாங்கள் இராமனைத் தழுவிக்கொண்டு; ஓய்வு இல் துன்பினால் - ஒழிதல்இல்லாத துக்கத்தோடு; உரறல் ஓங்கினார் - கதறத் தொடங்கினார்; ஆய சேனையும்- உடன் வந்த சேனைகளும்; அணங்கனார்களும் - பெண்களும்; தீயில் வீழ்ந்து தீமெழுகின் - தீயின் விழுந்து தீகின்ற மெழுகு போல; தேம்பினார் - மனம் உருகிஅழுதார்கள். தீ மெழுகு - வினைத்தொகை உரறல் - கதறல், பேரொலி செய்தலாம். உரறு - பகுதி. துயரில் கைகேயியும் இணைந்தது காண்க. 91 தாயர், சானகியைத் தழுவிக்கொண்டு வருந்துதல் | 2466. | பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப் பொன் அனார்களும், சனகன் பூவையைத் துன்னி, மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்; இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார். |
பின்னர் - பிறது; வீரரைப் பெற்ற பெற்றி அப்பொன் அனார்களும் -இராமன் முதலிய நால்வரையும் பெற்ற தன்மையுடைய அந்தப் பொன்போன்ற அரசமாதேவியர் மூவரும்; சனகன் பூவையை - சனகன் மகளாகிய சானகியை; துன்னி - நெருங்கி; மார்புஉறத்தொடர்ந்து புல்லினார் - பற்றிக்கொண்டு மார்பிற் கட்டியணைத்து; இன்னல் வேலை புக்கு - துன்பக் கடலிற் புகுந்து; இழிந்து - உள்ளே இறங்கி; அழுந்துவார்- அமிழ்பவராக ஆனார்கள். சனகன் மகள் சானகி, பூவை - உவமவாகுபெயர். பொன் போன்றார் - தேவியர்; போற்றிப் பாதுகாக்கப்படுபவர் என்னும் பொருளில், தழுவிய அளவில் துயரம் மீக்கூர்ந்தபடியை இவ்வாறு உரைத்தார். 92 யாவரும் இராமனை வந்து அடைதல் | 2467. | சேனை வீரரும், திரு நல் மா நகர் மான மாந்தரும், மற்றுளோர்களும், ஏனை வேந்தரும், பிறரும், யாவரும்,- கோனை எய்தினார் - குறையும் சிந்தையார். |
|