| 2474. | ‘நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? |
‘நிறையின் நீங்கிய - கற்பு நெறிவிலகிய; மகளிர் நீர்மையும் - பெண்களின் தன்மையும்; பொறையின் நீங்கிய தவமும் - பொறுமையினின்று விலகிய தவவொழுக்கமும்; பொங்கு அருள் துறையின் நீங்கிய - விளங்குகின்ற கருணைவழியிலிருந்து விலகிய; அறமும் - தருமமும்; தொல்லையோர் - முன்னோர்களது;முறையின் நீங்கிய - முறைமையிலிருந்து விலகிய; அரசின் - அரசாட்சியைக்காட்டிலும்; முந்துமோ - (கொடுமையில் முற்படுமோ? (முற்படாது என்றபடி) அரசு முறைமையில் தவறுதல் மற்றவற்றைக் காட்டிலும் பெருங்கேடு பயப்பதென்றான்;பிறவற்றையும் நெறிவழி நிற்கச் செய்வது அரசின் பாற்பட்ட தாதலால். “மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் இல்வழி இன்றாம்”மணி - 22 - 208- 9,) என்பதை ஈண்டுக்கருதுக.அறத்தின் பயன்அருளே. அருளில்லான் அறம்செய்தல் என்பது நனைப்புக்கிடம் தருவது. “அருளால் அறம் வளரும்” (அறநெறி. 142) என்பதையும் காண்க. 100 | 2475. | ‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம் துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால், மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ? |
‘பிறந்து - (சக்கரவர்த்திக்கு மூத்த மகனாகப் ) பிறந்து; நீயுடைப் பிரிவு இல் தொல் பதம் - நீ உரிமையாகப் பெற்றுடை உன்னைப் பிரிதல் இல்லாத பழையதாகிய அரசபதவியை ; துறந்து - கைவிட்டு; மாதவம் தொடங்குவாய் என்றால் - நீயேபெரிய தவத்தைச் செய்யத் தொடங்குவாயெனின்; மறந்து - அறிவு கெட்டு; நீதியின்திறம்பி - நீதிக்கு மாறுபட்டு; வாளின் கொன்று - வாளால் கொலை செய்து; அறம் தின்றான் என - அறத்தை அழித்தவன் என்று சொல்லுமாறு; அரசு அது ஆள்வெனோ? - உரிமையில்லாத அரசை ஆள்வேனோ? (ஆளேன் என்றானாம்) உரிமையும் உறவும் உடைய நீயே அரச பதவி கைவிட்டுத் தவம் செய்வாய் ஆனால், அஃதில்லாத யான் ஆளத் தொடங்குதல் வலிந்து கைப்பற்றி முறை தவறி ஆள்வதாக அன்றோ முடியும் என்றானாம். வாளின் கொன்று - வாளால் மிரட்டி என்னும் பொருளில் வந்துள்ளது. அறம் தின்றல் - தருமத்தை அடியோடழித்துவிடல். 101 | 2476. | ‘தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச, நீ புகையும் வெஞ் சுரம் புகுத, புந்தியால் |
|