‘உர விலோய் - வலிமை பொருந்திய வில்லை உடையவனே!; பரவு கேள்வியும் - புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்; பழுது இல் ஞானமும் - குற்றமற்றநல்லுணர்வும்; விரவு சீலமும் - உடன் கொள்ளத்தக்க ஒழுக்கமும்; வினையின்மேன்மையும் - செய்தொழிலின் சிறப்பும்; தொழற்கு உரிய தேவரும் - வணங்குதற்கு்உரிய தேவர்களும்; “குரவரே” - பெரியோர்களே; என - என்று; பெரிது கோடி - மிகவும் மனத்திற் கொள்வாய். கேள்வி, ஞானம், சீலம், வினை மேன்மை என்பனவற்றைக் ‘குரவர்’ என்றது உபசாரவழக்கு. பழுது - ஐயம், திரிபு. ஒன்றோ, மற்றொன்றோ எனல் ஐயம்; ஒன்றைப் பிறிதாக உணர்தல் திரிபு; இவை இரண்டும் இல்லாத மெய்புணர்வே ஞானமாம். குரவர் இவர் என்பதைப் பின் கூறுவர். 106 | 2481. | ‘அந்த நல் பெருங் குரவர் ஆர் எனச் சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால், “தந்தை தாயர்” என்று இவர்கள்தாம் அலால், எந்தை! கூற வேறு எவரும் இல்லையால். |
‘எந்தை- என் அன்பிற் சிறந்த பரதனே!; அந்த நல்பெருங் குரவர்- நான் கூறிய சிறந்த பெருமையுடைய குரவர்கள்; ஆர் என - யார் என்று; சிந்தைதேர்வுறத் தெரிய நோக்கினால் - மனத்தால் மிக ஆராய்ந்து விளக்கப் பார்த்தால்; “தந்தை தாயர்” என்று இவர்கள் தாம் அலால் - தந்தையும் தாயுமே அல்லாமல்; கூற- சிறப்பித்துக் கூற; வேறு எவரும் இல்லை - வேறு ஒருவரும் இல்லை. ‘தந்தை தாயர்’ - ‘உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர் சொல் நடைத்து’ என்பதனால் (தொல். சொல். எச்ச. 25.) பொதுத்திணையாயினும் முடிந்தது. தம்பியை எந்தை என்றது அன்புபற்றி வந்த மரபு வழுவமைதி. குரவர் ஐவர் ஆயினும் (தாய், தந்தை, தம்முன், ஆசான், அரசன்) முன்னறியப் படுதலின், தாய் தந்தை அளவுக்கு ஏனையோர் சிறப்பிலர் என்பது கருத்து. அதுவே ‘தேர்வுறத் தெரிய நோக்கினால்’ என்பதற்கும் கருத்தாம் என்க. ‘அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன், நிகரில் குரவர் இவ் ஐவர் இவர் இவரைத், தேவரைப் போலத் தொழுது எழுக என்பதே, யாவரும் கண்ட நெறி” (ஆசாரக்.16.) என்பது கொண்டு குரவர் ஆவார் இவர் என உணர்க. ‘ஆல்’ ஈற்றசை. 107 | 2482. | ‘தாய் வரம் கொள, தந்தை ஏவலால், மேய நம் குலத் தருமம் மேவினேன்; நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ? - ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய்! |
ஆய்வு அரும் - ஆராய்தற்கு அரிய; புலத்து - நூற்புலன்களான் ஆகிய; அறிவு - அறிவுணர்வை; மேவினாய் - அடைந்த பரதனே!; |