பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 693

தாய் வரம் கொள- தாயாகிய கைகேயி வரம் பெற்றுக்கொள்ள; தந்தை
ஏவலால்
- தந்தையாகிய தயரதன்கட்டளையாலே; மேய - (தாய்,
தந்தையராகிய குரவர் சொற்படி நடத்தல் என்கிற)பொருந்திய; நம் குலத்
தருமம் மேவினேன்
- நம் குலத்திற்குரிய தருமத்தை மேற்கொண்டேன்;
நீ வரம் கொள - நீ வேண்டிக்கொள்ள;  தவிர்தல் - (அவ்அறநெறியை)
விலக்கி ஒழுகுதல்; நீர்மையோ - நற்பண்பு ஆகுமோ? (நீயே கூறுக)

     குரவர் சொற் கேட்டல் அறனாதல் நூன்முடிபு ஆதலின் நான் மேற்
கொண்டது அறனே.நின்சொற் கேட்டல் எவ்வாறு அறனாகும் என்று
மறுத்தான் இராமன். இனிப் பரதனுக்கும் தாய்வரங்கொளத் தந்தை ஏவலால்
அரசாளுதல் அறமே என்றும் கூறினானாம். நுண்ணுணர்வாற் கற்றறிந்து
நுல்களாற் பெற்ற ஞானம் கைவரப்பெற்ற நீ அறத்தின் கூறு இதுவே
என்பதை அறியாது இராய்என்றானுமாம்.                          108

2783. ‘தனையர் ஆயினார் தந்தை தாயரை
வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ?
நினையல் ஓவிடா நெடிய வன் பழி
புனைதலோ? - ஐய! புதல்வர் ஆதல்தான்.

     ‘ஐய! - பரதனே; தனையர் ஆயினார் - மகனாகப் பிறந்தவர்கள்;
புதல்வர் ஆதல்தான் -புதல்வர் என்னும் சிறப்பினைப் பெறுவது; தந்தை
தாயரை
-தம் தந்தையை, தாயை; வினையின்- தாம்செய்யும் செயல்களால்;
நல்லது ஓர்இசையை வேய்தலோ- நல்லதாகிய ஒரு புகழை அடையும்படி
செய்தலாலா? (அல்லது); நினையல்ஓவிடா - என்றும் மனத்தை விட்டு
நீங்காத; நெடிய வன் வழி புனைதலோ - நீண்டகொடிய பழியை
அணிவிப்பதனாலா? எதனால்?

     புதல்வர் ஆதல் பெற்றோர்க்கு இசை வேய்தலால்தான் எனின்
பெற்றோர் சொல்வழி நின்று செயல் ஆற்றுதலே அதனை உண்டாக்கும்;
அவர் சொல்லுக்கு மாறுபடுவது அதனை உண்டாக்காது, பழியை ஆக்கும்
என்பதாம். ‘தான்’ உரையசை. பிறப்பால் தனையர் ஆயினும் செயல்சிறப்பால்
புதல்வர் ஆவர் என்பது கருத்து.                                 109

2484.‘இம்மை, பொய் உரைத்து, இவறி, எந்தையார்
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள, யான்,
கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலத்து அரசு செய்வேனோ?

     எந்தையர்- என் தந்தையார்; இவறி - அரசு ஆசைப்பட்டு; இம்மை-
இப்பிறப்பிலே; பொய் உரைத்து - (கைகேயிக்கு வரம் கொடுத்ததை
மறுத்துப்) பொய் சொல்லி; அம்மை - மறுமையில்;