‘மன்ன! - அரசனே!; முன்னர் வந்து உதித்து - எனக்கு முன்னே வந்து பிறந்து; உலகம் மூன்றிலும் - மூன்றுலகத்தும்; நின்னை ஒப்பு இலா நீ- நின்னை ஒப்பாவாரைப் பெற்றிலாத நீ; பிறந்த-; பார் - இப்பூமி; என்னது ஆகில் - (நீ சொன்னபடி) என்னுடைய தாயின்; யான் இன்று தந்தனென் - நான்இப்பொழுது அதனை உனக்குக் கொடுத்துவிட்டேன்; நீ போந்து மகுடம் சூடு’ - நீ வந்துமுடிசூடுவாயாக; எனா- என்று சொல்லி... (மேல் முடியும்). ‘நீ பிறந்த பார்’ என்று சொல்லி, ‘முதலில் இந்தப் பூமியில் நீ பிறந்தபடியால் இது உனக்கே உரிமை; பின்னரே எனக்கு உரிமையாம்’ என்பது பரதன் குறிப்பு. மன்ன! என்று பலமுறையும்பரதன் இப்பகுதியில் இராமனை அழைப்பது குறிக்கொளத்தக்கது. 112 | 2487. | ‘மலங்கி வையகம் வருந்தி வைக, நீ, உலம் கொள் தோற் உனக்கு உறுவ செய்தியோ? கலங்குறாவணம் காத்தி போந்து’ எனா, பொலம் குலாவு தாள் பூண்டு, வேண்டினான். |
‘வையகம் - நிலவுலகம்; மலங்கி - வருந்தி நிற்க; நீ-; உலம்கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ? - கற்றூணைப் போன்ற தோள்களை உடைய உனக்குரியதகுதியானவற்றைச் செய்வாயோ?; கலங்குறாவணம் - (உலகம்) கலங்காதபடி; போந்து காத்தி’- வந்து காப்பாற்றுவாயாக; எனா- என்று; பொலம் குலாவு தாள்- பொன் மயமான அழகு விளங்குகிற திருவடிகளை; பூண்டு - பிடித்துக் கொண்டு; வேண்டினான்-. ‘உலம் கொள் தோள்’ உலகைத் துன்பம் நீக்கித் காத்தற்கே அன்றித் தவம்செய்தற்கன்று எனக் குறிப்பால் உணர்த்தினானாம். 113 பரதனை அரசாட்சி ஏற்குமாறு இராமன் ஆணையிடல் | 2488. | ‘பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு அசைந்த எந்தையார் அருள, அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ? |
‘பசைந்த சிந்தை நீ - (என்பால்) அன்புற்ற மனத்தை உடைய நீ; பரிவின்- (உன்) அன்பினால்; வையம் - உலகத்தை; என் வசம் செய்தால் -என்னுடையதாகச் செய்தால்; அது முறைமையோ? - அது நீதியாகுமோ?; வசைக்கு அசைந்த- பழிக்கு அஞ்சிய; எந்தை யார்- எம் தந்தையார்; அருள - (கைகேயிக்கு)வரம் அளித்தருள; |