(அது கேட்டு) முனிவனும் - வசிட்டனும்; ‘இனி உரைப்பது ஓர் முறைமைகண்டிலெம்’ என இருந்தனன் - இனிமேல் சொல்வதற்குரிய ஒரு நீதியை அறிந்தோமில்லை என்றுகருதிப் பேசாதிருந்தான்; இளைய மைந்தனும் - பரதனும்; ‘அனையதேல் -அப்பபடியானால் (இராமன் அரசாளமாட்டானானால்); ஆள்பவர் நாடு ஆள்க - இராச்சியத்தை ஆளுபவர் ஆளட்டும்; நான் பனிபடர் காடு உடன் படர்தல் மெய்’ - நான் பனிமிக்ககாட்டில் இராமனுடன் செல்லுதல் சத்தியம் என்றான். ‘யார் ஆண்டால் எனக்கென்ன’ என்றான் பரதன். பனி, துன்பமும் ஆகும். பரதனுக்காகப் பேசிய முனிவனே பேச இயலாமல்போன பிறகு இனிச் செயல் இல்லை என்று பரதன் காடுறையும் முடிவிற்கு வந்தான் என்க. 129 தேவர்கள் கூறுதல் 2504. | அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார், ‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல், செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார். கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்; |
அவ்வழி - அச்சமயத்தில்; இமையவர் - தேவர்கள்; அறிந்து - உணர்ந்து; கூடினார்- ஒன்று சேர்ந்து ‘இவ்வழி- இப்பொழுது; இராமனை-; இவன் - இந்தப் பரதன்; கொண்டு ஏகு மேல் - உடனழைத்துக்கொண்டு அயோத்திக்குப்போய்விடுவானாயின்; நம் செயல் - (அரக்கரை அழிக்க வேண்டுவதாய) நம் காரியம்; செவ்வழித்து அன்று’ - ஒழுங்குற இயல்வது அன்று; என்று எண்ணினார் - என்றுகருதி; கவ்வையர் - துன்பமுற்று; விசும்பிடை- விண்ணிடத்து; கழறல்மேயினார்- பேசத் தொடங்கினார்கள். அவதார நோக்கம் இராவண வதம் ஆதலின், இராமன் அயோத்திக்குச் சென்றுவிடின் அது இயலாது போகும் என்று’ தேவர்கள் அஞ்சித் தடுக்கக் கூடினர் என்பதாம். கவ்வை - ஆரவாரமும் ஆம். கழறல் - பொருள் புரியாத உரத்த கூச்சலாம். 130 2505. | ‘ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப் போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்; ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம் காத்தல் உன் கடன்; இவை கடமை’ என்றனர். |
‘ஏத்த அரும் - புகழ்தற்கு அரிய; பெருங் குணத்து இராமன் - பெரியகுணங்களை உடைய இராமன்; தாதை சொல் - தந்தையின் வார்த்தையை; புரக்கும்-காப்பாற்றுகின்ற; பூட்சியான்-மேற்கோளுடையவன்; |