இவ்வழி போத்தரும் - இக்காட்டிடத்தே செல்வான்; ஆத்த ஆண்டு- (தந்தையால்) நியமிக்கப்பட்ட ஆண்டுகள்; ஏழினோடு ஏழும்- பதினான்கும்; அந்நிலம் - அவ்வரசை; காத்தல் - காப்பாற்றுதல்; உன் கடன் - உன் முறையாகும்; இவை கடமை’ - இவை, இருவராலும் தவறாது நிறைவேற்றி வைக்கப்பட்டவேண்டியவை; என்றனர் - என்று சொன்னார்கள். போத்து அரும் எனப் பிரித்து, பொத்து எனக் குறுக்கமாக்கி, மனக்குற்றம் எனப் பொருள் தந்து, ‘மனக் குற்றமில்லாத தயரதன் சொல்லை’ எனக் கூட்டிப் பொருள் செய்தலும் ஒன்று. இனி, போற்று அரும் என்பது எதுகை நோக்கிப் ‘போத்தரும்’ என நின்றதாகக் கொண்டு, போற்றுதற்கரிய தந்தை எனினும் ஆம். யாத்த - கட்டப்பட்ட என்பது ஆத்த என நின்றது முதற்குறை. நிறைவேற்றியே தீர வேண்டியது கடமை எனப்படும். 131 வானவர் உரைப்படி பரதனை இராமன் அரசாள ஆணையிடுதல் 2506. | வானவர் உரைத்தலும், ‘மறுக்கற்பாலது அன்று’ யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால் ஆனது ஓர் அமைதியின் அளத்தி, பார்’ எனா, தான் அவன் துணை மலர்த்த தடக் கை பற்றினான். |
வானவர் உரைத்தலும் - தேவர் இவ்வாறு கூறிய வளவிலே; ‘மறுக்கற்பாலது அன்று- (தேவர்கள் உரை) மறுக்கும் தன்மை உடையது அன்று; யான் உனை இரந்தனன் - நான்உன்னை வேண்டிக்கொண்டேன்; இனி-; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆனது ஒர் அமைதியின் - (உனக்குப்) பொருந்தியதான ஒரு தகுதிமுறைமையின்; பார் அளித்தி’- இவ்வுலகைக் காப்பாற்றுக; எனா - என்று சொல்லி; தான் - இராமன்; அவன் - அப்பரதனது; துணை மலர்த் தடக்கை - இரண்டு தாமரை மலர் போன்ற பெரியகைகளை; பற்றினான்- பிடித்துக்கொண்டான். வானவர் உரையும் உள்ளது; யானும் ஆணையிடுகிறேன் நீ அரசு புரிசு என்று இராமன் பரதனை வேண்டினான். பெரியவன் ஆதலாற் கைகளைப் பற்றிக்கொண்டான். ‘ஆனது ஓர் அமைதியின்’ என்பதற்கு நான் காட்டில் உறைவதற்கு நியமித்த காலம் வரை எனப் பொருள் கோடலும் ஒன்று. 132 பரதன் உடன்படுதல் 2507. | ‘ஆம் எனில், ஏழ் - இரண்டு ஆண்டில் ஐய! நீ நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம் கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்.’ |
|