2512. | பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்; மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்; கொண்டல்தன் ஆணையால் குகனும் போயினான். |
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் - பழமையான வேதங்களை ஆராய்தறிந்தபரத்துவாச முனிவனும் (தன்னிடத்திற்குச் சென்றான்; மண்டு நீர் நெடுநகர் மாந்தர்போயினார் - நிறைந்த அகழி நீராற் சூழப்பெற்ற பெரிய அயோத்தி நகரவாசிகளாயமணிதர்களும் புறப்பட்டுச் சென்றார்கள்; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார் - வெளிப்பட்டு விண்ணிற் கூடிய தேவர்களும் அங்கிருந்து நீங்கித் தத்தம் இடம் சேர்ந்தார்கள்;கொண்டல்தன் - இராமபிரானது; ஆணையால் - கட்டளையால்; குகனும்போயினான் - குகனும் தன் இடமாகிய சிருங்கி பேரத்துக்குச் சென்றான். குகன் சற்றுப் பின்தங்கி இராமனது ஆணை பெற்றுச்சென்றானாதல் வேண்டும். விண்டு - வெளிப்பட்டு. மறைந்துள்ள தேவர்கள், தம் காரியசித்திக்காக இராமனை அயோத்தி செல்லவொட்டாது தடுக்க வெளிப்பட்டுக் கூடினார் ஆதலின்‘விண்டு உரை தேவர்’என்று கூறினார். 138 இராமன் பாதுகை ஆட்சி நடத்தப் பரதன் நந்தியம் பதியிடை வதிதல் 2513. | பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல் மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்; போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்; ஒது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். |
பரதன் -; பாதுகம் தலைக்கொடு - இராமனது திருவடி நிலையைச் சிரமேற் கொண்டு;பைம்புனல் மோது கங்கையின் கரை கடந்து - (பசிய) குளிர்ந்த நீர் மோதுகின்றகங்கையின் கரைகளைக் கடந்து; முந்தினான் - முற்பட்டு; போது உகும் கடிபொழில்அயோத்தி புக்கிலன் - மலர்கள் சிந்துகிற மணம் வீசும் சோலை சூழ்ந்த அயோத்திநகருக்குள் நுழையாமல்; ஓது கங்குலின் - சொல்லப்படுகிற இரவில்; நெடிது உறக்கம் நீங்கினான்- மிகவும் தூக்கம் ஒழிந்து... (மேல் முடியும்) முற்சென்ற பரதன் அயோத்திக்குள் செல்லவில்லை என்றார். 139 2514. | நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம் செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான் இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான், அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். |
|