பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 709

     அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் - இரவும் பகலும்
ஓயாமல் அழுதுகொண்டுள்ளநீர் நீங்காத கண்ணை உடையனாய் (பரதன்);
நந்தியம் பதியிடை- நந்திக்கிராமத்திடத்தே; நாதன் பாதுகம்- இராமன்
திருவடிநிலை; செந்தனிக் கோல் முறைசெலுத்த - செங்கோல் முறையைச்
செய்ய; சிந்தையான் - மனத்தினால்; இந்தியங்களை - ஐம்பொறிகளையும்;
அவித்து - புலனின்பம் நுகராதவாறு அடக்கி; இருத்தல் மேயினான் -
அங்கேயே தங்கியிருத்தலைப் பொருந்தினான்.

     நந்தியம்பதி - அயோத்திக்குப் புறம்பே அண்மையில் உள்ள ஊர்.
நந்திப் பதி - ‘அம்’சாரியை.                                    140

இராமன் தென்திசை நோக்கி வழிக் கொள்ளுதல்

2515.‘ “குன்றினில் இருந்தனன்” என்னும் கொள்கையால்,
நின்றவர் நலிவரால், நேயத்தால்” எனா,
தன் துணைத் தம்பியும் தானும் தையலும்
தென் திசை நெறியினைச் சேறல் மேயினான்.

     ‘குன்றினின் இருந்தனன் என்னும் கொள்கையால் - (இராமன்)
சித்திரகூட பருவத்தில் உள்ளான் என்பதை அறிந்தபடியால்; நின்றவர் -
(அயோத்தி நகரத்தில்)இருக்கின்றவர்கள்; நேயத்தால் - அன்பினால்;
நலிவர் - (அடிக்கடி வந்து)வருத்துவர்; எனா - என்று கருதி; (இராமன்)
தானும் -; தன் துணைத் தம்பியும்- தன்னைப் பிரியாத இலக்குவனும்;
தையலும் - சீதையும்; (ஆகியோருடன்) தென்திசையில் நெறியினை -
தென்திசையில் உள்ள வழியின்கண்; சேறல் மேயினான்- நடந்து
செல்லுதலைப் பொருந்தினான்.

     அனைவரும் அறிந்த இச்சித்திரகூட பருவதத்தே இருந்தால் மீண்டும்
மீண்டும் அவர்கள் அடிக்கடி வந்து அன்பால் தொல்லை கொடுப்பர் என்பது
கருதி இராமன் சித்திரகூட மலைக்குத் தெற்கே காட்டின் உள்ளே ஊடுருவிச்
சென்று சேய்மையில் தங்கித் தவம் இயற்ற விரும்பித் தென்திசை
வழிக்கொண்டான் என்றார். ‘தம்பியும் தானும் தையலும்’ என்று எண்ணி,
மேயினான் என்று ஒரு முடிபு பெற்றது. “தானும் தேரும் பாகனும் வந்து என்
நலனுண்டான்” என்றாற் போலத் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே
தலைமையில் பொருளும் முடித்தன ஆவதோர் முறைபற்றி வந்தன எனச்
சேனாவரையர் (தொல். சொல். கிளவி. 51) கூறுமாறுபற்றி உணர்க. “தானும்
தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்” என்பதும். (திருவா.
திருக்கோத். 15) அதுவே.                                        141