பக்கம் எண் :

712அயோத்தியா காண்டம்

193.‘ஏத்த வந்து உலகு எலாம்
     ஈன்ற வேந்தனைப்
பூத்தவன் அல்லனேல்,
     புனித வேள்வியைக்
காத்தவன் உலகினைக்
     காத்தல் நன்று’ என,
வேத்தவை வியப்புற,
     விதர்ப்பர் கூறினார்.

     பூத்தவன் - திருமால்; வேள்வியைக் காத்தவன் - விசுவாமித்திரனது
வேள்வியைக் காத்தளித்த இராமன்.                             76-2

194. ‘பெருமையால் உலகினைப்
     பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஒம்புதற்கு
     உரிமை பூண்ட அத்
தருமமே தாங்கலில்
     தக்கது; ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது’ எனக்
     கலிங்கர் கூறினார்.

     ‘தருமமே தாங்கல்’ என்பது  இராமனை நினைத்துக் கூறியதாம். 76-3

195.‘கேடு அகல் படியினைக்
     கெடுத்து, கேட இலாத்
தாடகை வலிக்கு ஒரு
     சரம் அன்று ஏவிய
ஆடக வில்லிக்கே
     ஆக, பார்!’ எனாத்
தோடு அவிழ் மலர் முடித்
     துருக்கர் சொல்லினார்.

     படி - பூமி; ஆடக வில்லி - பொன் வில்லை உடைய இராமன்;
ஆடகம்- பொன் வகைகளுள் ஒன்று. ஆடகம், சாம்பூநதம்,  கிளிச் சிறை,
சாதரூபம் என்பவை பொன்னின்நான்கு வகைகள். இவற்றைச் செம்பொன்,
கரும்பொன்,  பசும்பொன், வெண்பொன்என்பர்.                  76-4