கண்டனன் - இராமனைத் தம்மிடம் நாடி வரக் கண்டு; புண்டரிக வாள் நயனம் கருணை கூர நீர் பொழிய நின்றான் - தாமரை போன்ற ஒளி பொருந்திய கண்களிலிருந்து இன்பக் கண்ணீர் சொரிய நின்றார். கூர-அதிகரிக்க. கருணை கூர என்பதனைக் கண்டனன் என்பதோடும் கூட்டலாம். குண்டிகை - தவசியர்க்குரிய வாய் குறுகிய சிறிய நீர்க்குடம். பொருவில் காவிரி - கங்கை முதலிய பிற புண்ணிய நதிகளும் இதில் படிந்து தம் பாவத்தைப் போக்கிக் கொள்ளும் தூய்மை வாய்ந்ததால் ஒப்பில்லாதது ஆயிற்று. 'கங்கையிற் புனிதமாகிய காவிரி' என்றார் பிறகும் (தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை. 23) பின்னரும் 'தெய்வப் பொன்னி' என இப்படலமும் கூறும் (2688). 46 2677. | நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்; அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால், 'நன்று வரவு' என்று, பல நல் உரை பகர்ந்தான்- என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். |
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் - (அங்ஙனம் நின்ற) அகத்தியரை அங்கே வந்த இராமன் அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்;அன்று - அப்பொழுது; என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் - எக்காலத்தும் உள்ளதாகிய இனிய தமிழின் இலக்கணங்களைக் கூறிப்புகழ் பெற்ற அகத்தியராகிய;அவனும் - அம்முனிவரும்; அழுத கண்ணால் அன்பொடு தழீஇ - அப்பொழுது அம்முனிவரும் இன்பக் கண்ணீர் விட்டவராய் அன்பினால் தழுவிக் கொண்டு; வரவு நன்று என்று பல நல்உரை பகர்ந்தான் - உங்கள் வருகை நன்றாயிருந்தது என்ற பல நல்ல சொற்களை இனிதாகச் சொன்னார். குறுமுனியாம் அகத்தியர் முன் நெடியோனாம் இராமன் வந்து வணங்கினான். மாவலியிடத்து உலகனைத்தும் அளக்க எடுத்த திரிவிக்கிரமனை இது நினைவூட்டும். பண்பு நலன்களால் யாவரினும் உயர்ந்தோன் என்றுமாம். தமிழ் மொழி என்றுமுள்ளது என்பதைச் சுட்டியதால் முன்னரே இருந்த மொழிக்கு அகத்தியர் இலக்கணம் அமைத்தார் என்ற வரலாறு இத்தொடரால் புலப்படும். தென்தமிழ் தென்னாட்டில் வழங்கிய தமிழ் என்றுமாம். 47 |