| 2678. | வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற, காதல் மிக நின்று, எழில் கமண்டலுவின் நல் நீர் மா தவர்கள் வீசி, நெடு மா மலர்கள் தூவ, போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான். |
வேதியர்கள் வேதமொழி வேறுபல கூற - அந்தணர்கள் பல்வேறு வகைப்பட்ட வேத வாக்கியங்களைச் சொல்ல; காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல்நீர் மாதவர்கள் வீசி - அன்பு மிகுதலால் சூழ்ந்து நின்று அழகிய கமண்டலங்களிலுள்ள நல்ல நீரை மிக்க தவமுடையவர்கள் தெளித்து; நெடுமாமலர்கள் தூவ - அழகிய பெரிய மலர்களை மேலே சொரிய, (அகத்தியர் இராமனை); போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் - மலர்கள் மணம் வீசும் குளிர்ந்த சோலைக்குள் அழைத்துக் கொண்டு போனார். வேதமந்திரங்களைக் கூறி நன்னீர் தெளித்து மலர் தூவல் அம்முனிவர் செய்யும் உபசார வகை. கமண்டலு - கமண்டலம். குண்டிகை கரசும் எனவும் வழங்கப்பெறும். போது என்பது அப்பொழுது மலரும் நிலையில் உள்ளமலர். 48 | 2679. | பொருந்த, அமலன் பொழிலகத்து இனிது புக்கான்; விருந்து அவன் அமைத்தபின், விரும்பினன்; 'விரும்பி, இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து, என் அருந் தவம் முடித்தனை; அருட்கு அரச!' என்றான். |
அமலன் பொழிலகத்து(ப்) பொருந்த இனிது புக்கான் - இராமன் சோலைக்குள் மனம் ஏற்றிட இனிமையாய்ப் புகுந்தவனாய்; அவன் விருந்து அமைத்தபின் விரும்பினன் - அம்முனிவர் விருந்திட்டு உபசரித்த பின் மகிழ்ந்திருந்தான்; விரும்பி(அப்போது அகத்தியர்) மகிழ்ந்து (இராமனைப்பார்த்து); அருட்கு அரச - கருணைக்குத் தலைவனே!; இருநீதவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து மிக்க தவத்தைச் செய்த என்னுடைய வீட்டில் எழுந்தருளி; என் அருந்தவம் முடித்தனை என்றான் - என்னுடைய அரிய தவத்தை நிறைவேற்றினாய் என்று கூறினார். |