பக்கம் எண் :

அகத்தியப் படலம் 105

இருந்தால் நீயும் தவம் செய்யலாம். எம்போன்ற முனிவர் தவத்திற்கு
இடையூறு செய்ய வரும் அரக்கர்களை நீ அழிப்பதால் அவர்களும் தவம்
செய்ய இயலும் என அகத்தியர் கூறுவதால் தவச் செயல் கெடாது நிலைபேறு
எய்தலை இராமன் வரவுணர்த்தும்.                                 52

2683. 'வாழும் மறை; வாழும் மனு நீதி;
     அறம் வாழும்;
தாழும் இமையோர் உயர்வர்;
     தானவர்கள் தாழ்வார்;
ஆழி உழவன் புதல்வ! ஐயம்
     இலை; மெய்யே;
ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு
     உறைதி' என்றான்.

    ஆழி உழவன் புதல்வ - ஆணைச் சக்கரத்தை உலகெங்கும்
செலுத்தும் தயரதன் மகனே!; இனி மறைவாழும் - (நீ இங்குத் தங்குவதால்)
இனி மேல் வேதங்கள் வாழ்வு பெறும்; மனுநீதி வாழும் - மனு
தருமசாத்திரமும் வாழும்; அறம் வாழும் - எல்லா வகைத் தருமங்களும்
நிலை பெறும்; தாழும் இமையோர் உயர்வர் - அரக்கர் கொடுமையால்
தாழ்வுற்ற தேவர்கள் உயர்ந்த நிலை அடைவர்; தானவர்கள் தாழ்வார் -
அரக்கர்கள் தாழ்வடைவார்கள்; ஏழ் உலகும் வாழும் - ஏழு உலகங்களும்
வாழ்வடையும்; ஐயம் இலை மெய்யே - இதில் சந்தேகம் இல்லை;
உண்மையே!; இங்கு உறைதி என்றான் - இவ்விடத்தில் தங்குவாயாக
என்று அகத்தியர் கூறினார்.

     வாழும் மறை என்றதால் எக்காலத்தும் அழியாத வேதங்கள் என்பர்
சிலர். பதினெட்டு நீதி நூல்களில் தலையாயது மனுநூல் ஆகையால் அதனை
எடுத்துரைத்தார். ஆழி உழவன் - ஆணைச் சக்கரமாம் ஏரைக் கொண்டு
உலகு முழுவதையும் உழுபவன் எனத் தயரதனின் ஆட்சிப் பெருமை
கூறப்பட்டது. தானவர் என்பவர் தனு என்பாளிடம் தோன்றியவர் எனும்
பொருளால் அசுரர்களைச் சுட்டும். அசுரர்போல அரக்கர்கள் கொடியவர்கள்
எனவே அவரையே சுட்டியது என்பர்.                             53

2684. 'செருக்கு அடை அரக்கர் புரி தீமை
     சிதைவு எய்தித்
தருக்கு அழிதர, கடிது
     கொல்வது சமைந்தேன்;
வருக்க மறையோய்! அவர் வரும்
     திசையில் முந்துற்று
இருக்கை நலம்; நிற்கு அருள் என்?'
     என்றனன் இராமன்.