பக்கம் எண் :

108ஆரணிய காண்டம்

பெற்றும்; மணல் ஓங்கி - மணற்குன்றுகள் உயர்ந்து விளங்கப் பெற்றும்;
பூங் குலை குலாவு குளிர் சோலை புடைவிம்மி -
பூங் கொத்துகள்
விளங்கும் குளிர்ந்த சோலைகள் பக்கங்களில் விளங்கப் பெற்றும்;
தூங்குதிரை ஆறுதவழ் சூழலது ஓர் குன்றின் பாங்கர் -
குதிக்கும்
அலைகளுடைய ஆறுகள் பாயப் பெற்றுமுள்ள சூழ்ந்த இடங்களையுடைய
ஒரு சிறு மலையின் பக்கத்தில்; பஞ்சவடி உறையுள் உளது - பஞ்சவடி
என்னும் வாழிடம் ஒன்று உள்ளது; ஆல் - அசை.

     பஞ்சவடி - ஐந்து ஆலமரங்களின் கூட்டம். அதனை உடைய
இடத்தைச் சுட்டியது. அகண்ட கோதாவரி ஆற்றின் கரையில் நாசிகாத்திரி
யம்பகத்துக்கு அருகில் உள்ளது பஞ்சவடி. அது இராமனின் கருத்திற்கியைந்த
வாழிடமாம் என்பது. ஆறு - கோதாவரி முதலிய ஆறுகள். அகத்தியர்
ஆசிரமத்திலிருந்து பஞ்சவடி இரண்டு யோசனை தூரம் என வான்மீகம்
கூறும். பூங்குலை உம்மைத் தொகையாகக் கொண்டு பூக்களும் பழங்களும்
என்றுமாம். மஞ்ச என்பது மைந்த என்பதன் போலி. ஓங்கு என்ற சொல்
முதலடியில் நான்கு முறை ஒரு பொருளில் அடுக்கி வந்ததால் சொற்பொருட்
பின்வரு நிலையணி.                                            57

2688.'கன்னி இள வாழை கனி
     ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு
     போதும் உள; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல்
     ஆறும் உள; போதா,
அன்னம் உள, பொன் இவளொடு
     அன்பின் விளையாட.

    (பஞ்சவடியில்) கனி ஈவ கன்னி இளவாழை - பழங்களைத் தரும் மிக
இளமையான வாழை மரங்களும்; கதிர் வாலின் செந்நெல் உள - ஒளி
பொருந்திய நுனியையுடைய செந்நெற்பயிர்களும் உள்ளன; தேன் ஒழுகு
போதும் உள -
தேன் வழிகின்ற மலர்களும் உள்ளன; தெய்வப் பொன்னி
எனல் ஆய புனல் ஆறும் உள -
தெய்வத் தன்மை பொருந்திய 'காவிரி
என்று கூறத்தக்க நீர் வெள்ளம் பாயும் நதிகளும்' உள்ளன; பொன்
இவளொடு அன்பின் விளையாட -
பொன்னையொத்த இச்சீதையுடன்
அன்போடு விளையாடுவதற்கு; போதா அன்னம் உள - பெருநாரைகளும்
அன்னங்களும் உள்ளன.

     கன்னி இளவாழை - ஒன்றன் பின் ஒன்றாக அழியாது ஈன்று
கொண்டேயிருக்கும் வாழை எனலுமாம். பஞ்சவடி நீர்வளம் மிக்க
இடமாதலால் வாழை, நெல், சோலை, நீர்ப்பறவைகள் ஆகியன விளங்கி
நிற்கின்றன. கதிர்வால் - ஒளி பொருந்திய வாலோடு விளங்கும் என்பர்.
உணவுக்கும் நீருக்கும் அவ்விடத்தில் பஞ்சமில்லை என்பது இதனால்
விளங்கும். மீண்டும் சீதைக்குப் பொழுது போகப் பறவைக் கூட்டங்கள்
உள்ளன என்றார். பொன்னி யாற்றைக் கூறியதால் கவியின் நாட்டுப்பற்று
நன்கு புலப்படும்.