பக்கம் எண் :

அகத்தியப் படலம் 109

     கன்னி இள - ஒரு பொருட் பன்மொழி. கதிர்வாலின் செந்நெல் எனப்
பாடங் கொண்டு ஒளிரும் வாலை உடைய ஒருவகைக் கெண்டை மீனைக்
குறிக்கும் என்பர்.                                             58

இராமன், அகத்தியனிடம் விடைபெற்று புறப்படுதல்

2689.'ஏகி, இனி அவ் வயின் இருந்து
     உறைமின்' என்றான்;
மேக நிற வண்ணனும் வணங்கி,
     விடை கொண்டான்;
பாகு அனைய சொல்லியொடு
     தம்பி பரிவின் பின்
போக, முனி சிந்தை தொடர,
     கடிது போனான்.

    இனி அவ்வயின் ஏகி இருந்து உறைமின் என்றான் - இனிமேல்
அவ்விடத்திற்கு நீங்கள் சென்று அங்குத் தங்கியிருந்து வாழுங்கள் என்று
அகத்திய முனிவர் கூறினார்; மேக நிற வண்ணனும் வணங்கி விடை
கொண்டான் -
முகில் போன்ற கரிய நிறங்கொண்ட இராமனும்
அகத்தியரைத் தொழுது அவ்விடத்திலிருந்து செல்ல அனுமதி பெற்றான்;
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்போக - தேன் பாகு
போன்ற இனிய சொற்களை உடைய சீதையோடு தம்பியாகிய இலக்குவனும்
அன்போடு பின்போக; முனி சிந்தை தொடர - அகத்திய முனிவரின் மனம்
பின் தொடரவும்; கடிது போனான் - விரைவாக அப்பால் சென்றான்.

     மேக நிற வண்ணன் - முகிலின் தன்மை போல் கைம்மாறு கருதாது
அருள் புரிபவன். பாகு அனைய சொல்லி' எனச் சீதையை இங்குக்
குறிப்பிட்டது போல முன்னர் மிதிலைக் காட்சிப் படலத்தில் 'பாகு ஒக்கும்
சொல் பைங்கிளி யோடும்' எனக் குறிக்கப் பெறுவாள் (500). சிந்தை
தொடர்தல் என்பது அன்புடையார் பிரியும் போது அவரைப்பின் பற்றி
மனமும் நினைக்கும் என்பதைக் குறிக்கும்.                          59