பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 11

அணங்கிய சலஞ்சலம் - சங்குகள் வருந்திப் பெற்ற சலஞ்சலம் என்னும்
உயர்ந்த சங்குகளால்; அலம்பு - ஒலிக்கின்ற, தவளக் கங்கணங்களும் -
வெண்ணிறக் கைவளைகளும்; இலங்கிய கரம்பிறழவே - விளங்கும்
கைகளில் விளங்கவும்; ஏ - ஈற்றசை.

     பாம்பின் மணிகளால் இயன்ற வலயங்களோடு முத்துக்கங்கணமும்
விராதன் அணிந்துள்ளான்.சஞ்சலம் - வலம்புரி ஆயிரம் சூழ்ந்த ஓர்
உயர்ந்த சங்கு. (49).                                           15

2532.முந்து வெள்ளிமலை பொன்னின்
     மலையோடு முரண,
பந்து முந்து கழல் பாடுபட
     ஊடு படர்வோன்,
வந்து மண்ணினிடை யோன்
     எனினும், வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன்
     என்ற திறலோன்

    முந்து வெள்ளிமலை பொன்னின் மலையோடு முரண - சிறந்த
கைலை மலையும், மேருமலையோடு மாறுபடும்படி; பந்து முந்து கழல்
பாடுபட -
பந்தாகமுன்னே தள்ளும் கால்களால் அவதியுற; ஊடு
படர்வோன் -
அம்மலைகளின் இடையே நடந்துசெல்வான்; வந்து
மண்ணினிடை யோன் எனினும் -
வந்து உலகின் இடையே உள்ளான்
என்றாலும்; வானினிடையோர் சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன்
என்ற திறலோன் -
தேவர்களின் மனத்திலும் கண்ணிலும் உள்ளவன் என்று
கூறப்படும் வலிமையுடையவனும்,

     கைலை மலையையும் மேருமலையையும் பந்துபோல் ஆடவல்ல வலிய
பெரிய தாள்களால் அக் காட்டில் செல்பவன் விராதன் ஆவான்.
அவனிடத்துக்கொண்ட அச்சத்தால் தேவர் சிந்தையுளும் விழியிலும் உளன்
என்றார். சிவனுறையும் மலை கைலைஎன்பதால் முந்து வெள்ளிமலை
என்றார். வான் - சுவர்க்கத்திற்கு இலக்கணை.                      16

2533.பூதம் அத்தனையும் ஓர் வடிவு
     கொண்டு, புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன்; உரும்
     ஒத்த குரலன்;
காதலித்து அயன் அளித்த, கடை
     இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்புஅவை
     படைத்த வலியான்.