4. சடாயு காண் படலம் இப்படலம் அகத்தியன் ஆச்சிரமத்திலிருந்து பஞ்சவடிக்குச் செல்லும் வழியில் கழுகரசனாம் சடாயுவைக்கண்டு அவர் நட்பைப் பெற்ற செய்தியைக் கூறும். சடாயு, இராமன் முதலிய மூவரையும் கண்ட செய்தியைக் கூறுவது என்றும் கொள்ளலாம். சடாயு என்ற சொல்லுக்குப் பல மயிர்கள் சேர்த்துத் திரித்த சடை போன்ற வாழ்நாளைக் கொண்டவன் என்பது பொருள். இறகில் உயிரை உடையவன் என்றும், சடையை உடையவன் என்றும் கூறுவர். இவர் அருணனின் மகன். சம்பாதியின் தம்பி தயரதனின் தமையன் முறை ஆதல் பற்றி இவர்க்கு வைணவ மரபில் 'பெரியவுடையார்' என்ற பெயர் உளது. இப்படலத்திற்குச் சடாயுப் படலம் என்ற பெயரும் சில சுவடிகளில் காணப் பெறும். இங்கு இராமன் முதலானோர் சடாயுவைக் காண்கின்றனர். சடாயுவின் தோற்றப் பொலிவு விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளது. முதலில் இராமலக்குவர் சடாயுவின் பேருருவைக் கண்டு அரக்கனோ என ஐயுற்றனர். அவர்களைப் போன்றே இராமலக்குவரை யார் எனச் சடாயு அறிய இயலாமல் அவர்களையே வினவி அறிகிறார். தயரதன் மறைவை அறிந்து சடாயு வருந்துகிறார். பின் அவர்களிடம் தம் வரலாற்றைக் கூறுகின்றார். தயரதன் பிரிவால் தானும் உயிர்விடத் துணிந்து பின் அதைத் தவிர்க்கிறார். அவர்கள் காட்டிற்கு வந்த வரலாற்றை அறிகிறார். இராமனின் பண்பைப் பெரிதும் பாராட்டுகிறார். அவர்கள் பஞ்சவடிக்குச் செல்லும் விருப்பை அறிந்து சடாயு அவ்விடத்தில் அவர்களைச் சேர்ப்பிக்கிறார். காட்டு வாழ்க்கையில் முதலில் அரக்கர்களின் தடையை வென்று சரபங்கர் சாலையை அடைந்த பின் தண்டகாரணிய முனிவர்களைக் காக்க முற்படும்போது அகத்தியரிடம் படைக்கலம் பெற்றது போலக் கழுகின் வேந்தனின் உதவியை இராமன் பெறுகிறான். இராமன் முதலியோர் சடாயுவைக் காணுதல் கலி விருத்தம் 2690. | நடந்தனர் காவதம் பலவும்; நல் நதி கிடந்தன, நின்றன, கிரிகள் கேண்மையின் |
|