பக்கம் எண் :

சடாயு காண் படலம் 113

கால்களின் நிறத்தின் சிவந்த ஒளி பொருந்தவும்; கண் அகல் நீல் நிற
வரையினில் -
இடம் அகன்ற நீல நிறத்தையுடைய மலையில்; பவள நீள்
கொடி போல் நிறம் பொலிந்தென -
நீண்ட பவளக் கொடி போன்று
அழகிய நிறத்தோடு விளங்குதல் போல; பொலிகின்றான் தனை -
விளங்குகின்ற சடாயுவை,

     விசும்பின் மால்நிறம் சடாயுவின் மேனி நிறத்தால் மறைந்தது எனும்
போது அவ்வொளி மேலே வீசுவதைச் சுட்டும். காலின் செந்நிறம் கீழ்ப்புறம்
வீசிக் கரிய மலையில் பவளக் கொடி படர்ந்தது போல் விளங்கி நிற்கும்
நிலை அதன் சிறப்பைக் கூறும். சேய் என்பது செம்மை என்பதன் விகாரம்
நீல் என்பது நீலம் என்பதன் - கடைக்குறை.                      4

2694.தூய்மையன், இருங்
     கலை துணிந்த கேள்வியன்,
வாய்மையன், மறு இலன்,
     மதியின் கூர்மையன்,
ஆய்மையின் மந்திரத்து
     அறிஞன் ஆம் எனச்
சேய்மையின் நோக்குறு
     சிறு கணான்தனை,

    தூய்மையன் - (உள்ளும் புறமும்) தூய்மை உடையவன்; இருங்கலை
துணிந்த கேள்வியன் -
மிக்க கல்வியையும் தெளிந்த துணிவையும்
கொண்ட கேள்விச் செல்வமுமுடையவன்; வாய்மையன் - உண்மை
உடையவன்; மறுஇலன் - குற்றம் இல்லாதவன்; மதியின் கூர்மையன் -
அறிவின் நுட்பமுடையவன்; ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம்
என -
ஆராய்ச்சியுடைய மந்திராலோசனையில் வல்ல அறிவுள்ள
அமைச்சனைப் போல; சேய்மையின் நோக்குறு - மிகத் தூரத்தில்
உள்ளவற்றைக் கண்டறியும்; சிறுகணான் தனை - சிறிய கண்ணுடையவன்
ஆகிய சடாயுவை,

     இருங்கலை துணிந்த கேள்வியன் என்பது பல சாத்திரங்களையும்
கற்றும் தக்கோரிடத்துக் கேட்டும் தெளிவு உடையவன், கற்றவை எல்லாம்
பின்னர்க் கேள்வியால் துணிவுபெறும். வாய்மை என்பது மெய்யின் தன்மை.
மறு என்பது காமம், வெகுளி, மயக்கம் முதலியவை. மதியின் கூர்மை -
நுட்பத்தினுள்ளும் நுட்பமாக நுழைந்து ஆயும் நுண்ணறிவு. மந்திரத்து
அறிஞன் என்பதன் விளக்கமாக அயோத்தியா காண்ட மந்திரப் படலத்தில்
'உற்றது கொண்டு மேல் வந்து உறு பொருள் உணரும் கோளார்' (1319)
'தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார்' (1321) எனக் கூறப்பட்டது.
சடாயு அறிவு நுட்பமும் கட்புல நுட்பமும் வாய்ந்தவர் என்பதைச்
சேய்மையின் நோக்குறு சிறுகணான்' என்ற தொடர் காட்டும். உலக
வழக்கில் ‘கழுகுக் கண்ணுடையவன்‘ என்று கூறுதல் இதனை மேலும்
விளக்கும். சேயதை நோக்கல் என்பதற்குக் காலமிடையிட்டவற்றையும்
தேயமிடையிட்டவற்றையும் அறியும் நுண்ணறிவு என்றும் பகை வெல்லும்
அறிவு எனவும் கூறுவர். பறவையுள் பிறப்பினும் சடாயு உடல் தூய்மையும்,