'ஒப்பாம் என அறிகிலேன்' என்றதால் 'ஒப்பாக மாட்டான் என அறிவேன்' என்பது தெளிவு. இவை இரு பாட்டாலும் சடாயு இராமலக்குவரைப் புலவரல்லர் எனத் தெளிந்தமை கூறப்பட்டது. இவர்கள் இருவராக இருந்ததாலும் புரந்தரன் முதலியோர் கொண்டுள்ள வச்சிரப்படை முதலியவை காணப் பெறாமையாலும் இம்முடிவுக்குச் சடாயு வந்தார். பழைய இராமாயணத் தனிச் செய்யுளில் சாம்பவன் கூற்றில் 'அலைகடல் கடையக் கண்டேன்' எனத் தொடங்கிச் 'சிலை மதன் வடிவுகண்டேன்' என்ற தொடர் காணப்படுகிறது. இதனால் சடாயுவும் மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்படாமைக்கு முன் கண்ட செய்தி வெளிப்படுகிறது. 13 2703. | 'உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்; மலர்மகட்கு உவமையா ளோடும் வந்த இச் சிலை வலி வீரரைத் தெரிகிலேன்' எனா, | உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் - மூன்று உலகங்களையும் தமக்குரிய பொருளாகச் செய்யவல்ல; அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் - அளவு சொல்ல முடியாத நல்ல ஆண்மக்களின் இலட்சணங்களோடு கூடிய திருமேனிகளை உடையவர்களாய்; மலர்மகட்கு உவமையாளோடும் - தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் திருமகளுக்கு உவமையாகக் கூறத்தக்க பெண்ணோடும்; வந்த இச் சிலை வலி வீரரைத் தெரிகிலேன் எனா - இங்கு வந்த இந்த வில் வலிமையுடைய வீரர்களை இன்னார் என அறியேன் எனக் கருதி, இவர்களின் உடல் உறுப்பின் இலக்கணங்களைப் பார்க்கும் போது இவர்கள் சுவர்க்கம், பூமி, பாதலம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் உரியவராதல் வேண்டும் என்றும், சீதையின் தெய்வத் தன்மையை அறிந்து திருமகள் போன்றவள் என்றும் சடாயு எண்ணுகிறார். முன்னர்க் காமனை இராமலக்குவர்க்கு உவமை ஆகான் எனக் கூறிய சடாயு சீதைக்குத் திருமகளை ஒப்புமை கூறியது காப்பிய நோக்குடன் ஒத்துச் செல்கிறது. மிதிலைக் காட்சிப் படலத்தில் சீதையின் உரு வெளிப்பாடு கண்ட இராமனும் 'பூமகள் ஆகும் கொலோ' (620) எனக் காப்பியப் போக்குக்கு ஏற்ப எண்ணியது ஒப்பிடத்தக்கது. 14 2704. | 'கரு மலை செம் மலை அனைய காட்சியர்; திரு மகிழ் மார்பினர்; செங் கண் வீரர்தாம், | |